வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : கோமாளி பட பாணியில், 10 ஆண்டுகளுக்கு பின் ஞாபகம் திரும்பி, எம்.பி.,யை பாராட்டி அடிப்படை வசதியில்லாத வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் புது பேனர் வைக்கப்பட்டுள்ளது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
வில்லிவாக்கம் சென்னையின் முக்கிய பகுதியாகும். குறிப்பாக தொழிற்கூடங்கள் நிறைந்த பகுதியாக விளங்கும், அம்பத்துார், ஆவடி, பாடி உள்ளிட்ட பகுதிகளின் மையப்பகுதியில் வில்லிவாக்கம் அமைந்துள்ளது. தினமும் பல பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான மக்கள் வில்லிவாக்கம் பகுதிக்கு சென்று வருகின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த வில்லிவாக்கத்தில் உள்ள பஸ் நிலையத்தின் நிலைமை படுமோசமாக உள்ளது.
சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்கள் கால்நடைகளை இங்கு தான் மேய விடுகின்றனர்.இதனால், மாட்டு சாணம் உள்ளிட்ட கழிவுகளால் சுகாதார சீர்கேடுடன், அப்பகுதி மாட்டு தொழுவம் போன்று காட்சியளித்தது. இது குறித்து நம் நாளிதழில் அடிக்கடி செய்தி வெளியானது.பல ஆண்டுகளாக, அடிப்படை வசதியின்றி மாட்டுத் தொழுவமாக காட்சியளிக்கும் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில், தொழிற்சங்கத்தினர் சிலர் '2010 - 11ம் ஆண்டு மத்திய சென்னை எம்.பி., தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதி 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம்'' என, புதிதாக 'பேனர்' வைத்துள்ளனர்.

இது குறித்து பஸ் பயணியர் கூறியதாவது:தன் வாழ்க்கையில் 16 ஆண்டுகள் ஆழ்மயக்க நிலையில் இருக்கும் ஒருவர், மீண்டு வரும் கோமாளி படப்பாணியில், 10 ஆண்டுகளுக்கு முன் 60 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டதாக, வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் தற்போது பேனர் வைக்கப்பட்டுள்ளது.அரசியல் உள்நோக்கத்திற்காகவே 10 ஆண்டுகளுக்கு பின், இந்த 'பேனர்' வைத்துள்ளனர்.
அடிப்படை வசதியில்லாத வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த 'புது பேனர்' அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE