ஒண்ணு கூடிட்டாங்கய்யா!
கோளாறான மாவட்டத்தில் ஆறு தொகுதிகளில் கோஷ்டி சிக்கல் இருப்பதால், அடுத்த அசெம்பிளி தேர்தலில் பூக்காரங்க வெற்றிக்கு நெருக்கடி ஏற்படும் நிலை இருந்தது. நேற்று முன்தினம் நடந்த பூக்காரங்க கூட்டத்தில் ஒரு எம்.பி., நான்கு அசெம்பிளி தொகுதி 'மாஜி'ங்க எல்லாம், நாங்க ஒற்றுமையா தான் இருக்கோம்னு காட்ட கூடினாங்களாம்.மேலிடம் அறிவிக்கிற வேட்பாளர்களை வெற்றி பெற செய்தாக வேண்டும் என்பதே கூட்டத்தின் நோக்கம் என்பதை வெளிபடுத்தினாங்க.
செங்கோட்டைக்காரரால் தான்,கோஷ்டி பிரச்னை ஏற்பட்டதாக மேலிடம் வரை தெரிவிச்சாங்க; லோக்கல் கட்சிக்காரர்களை பிரித்தாளும் உள்வேலை நடப்பதை புட்டு புட்டு வெச்சிருந்தாங்க. ஒருவழியாக ஒண்ணு கூடிட்டாங்கன்னு சொல்ல, போட்டோவுக்கு போஸ்' குடுத்துட்டாங்க.
அதிகாரிகளுக்கு சாவி!
கோர்ட் பக்கத்தில மினி விதான் சவுதா கட்டடப் பணியை முடிக்காம மெத்தனம் காட்டுறாங்கன்னு ஆபீசர்களுக்கு அசெம்பிளி மேடம், 'டோஸ்' கொடுத்திருக்காங்க. அரசு நிதி வழங்கியும் சும்மா இருக்கிறாங்க. நான் பொறுமையா இருப்பது, அதிகாரிகளுக்கும், கான்ட்ராக்ட்காரர்களுக்கும் பிடிக்கலை போல தெரிகிறது.'மினி விதான் சவுதா கட்டடப் பணியை இன்னும் ஒரே மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இல்லையேல் அத்தகைய அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பேன். கான்ட்ராக்ட்காரரை பிளாக் லிஸ்ட்'ல் வைப்பேன்'னு அதிர வைத்துள்ளார். விரைவில் தேர்தல் வரலாம் என்பதால் மெத்தனமாக செயல்படும் ஆபீசர்கள் வேகமாக இயங்க 'சாவி' கொடுத்திருக்காங்க.
யாரிடம் 'கன்ட்ரோல் பவர்?
'முனிசி.,யில் இதுவரையில் புதிதாக மின் விளக்குகள் வாங்கவே இல்லையாம். இருக்கும் மின் விளக்குகளோ தேவையான வெளிச்சம் தரவில்லை. புதியதாக வாங்காம காலம் கடத்தப் படுகிறது. நகராட்சியில் கோடி கோடியாக நிதி குவிவதாக 'பேச்சு' மட்டுமே உள்ளது. ஆனா அபிவிருத்தி பணிகள், எதுவுமே நடந்தபாடில்லை என உறுப்பினர்கள் விளாசுறாங்க.வார்டு டெவலப்மென்ட் பணிகளை முனிசி., உறுப்பினர்கள் கவனத்துக்கு வராமலேயே கான்ட்ராக்ட்காரர்கள் செய்து வராங்களாம்.
அதிலும், முனிசி., துணைத் தலைவர் மேடம் வார்டிலும் அவரை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வேலைகள் நடக்குதாம். இதனால் அவர் தனது 'கவுரவம்' என்னாவதுன்னு சப்தம் போடுறாங்க. அப்படியும், அசெம்பிளி மேடம் காதுக்கு சென்றதாக தெரியலையே. நகராட்சி பணிகளின் கன்ட்ரோல் பவரும் அசெம்பிளி மேடம் கையில் தான் இருக்குதாமே.
கேமரா பொருத்துவாங்களா?
கோல்டு சிட்டியில் சட்டம் - -ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் நகரின் முக்கிய இடங்களில் எல்லாம் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்துவதாக சொல்லப்பட்டதே தவிர, இதுவரை நோ ஆக் ஷன். காக்கி சட்டை அதிகாரிகள் வசம், கேமரா பொருத்த போதிய 'நிதி' வசதி இல்லையாம்.தொகுதி அசெம்பிளிகாரரு தான், தொகுதி டெவலப்மென்ட் நிதியில், கேமராக்கள் பொருத்துவதாக தெரிவிச்சாங்களாம். ஆனால், அவங்களும் கூட செய்ய மறந்துட்டாங்களே. பாதிப்பு ஏற்பட்டா தான், 'கேமரா புட்டேஜ்' பற்றி கவனம் வரும் போல.