பெங்களூரு:ஜாமினில் வந்து தலைமறைவான கொலையாளி ஒருவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு லக்கசந்திராவை சேர்ந்த உதய் சந்திரா என்பவர், பழங்கால தங்கம், வைர நகைகளை வைத்திருந்தார். 2014 மார்ச் 25ல் சிலர், இதை வாங்குவது போல இவரது வீட்டுக்கு வந்து, தாக்குதல் நடத்தி கொள்ளையடிக்க முயன்றனர்.இதை தடுக்க முயன்றதால், உதய் சந்திராவின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள், 2.50 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த ஆடுகோடி போலீசார், மைசூரின் ஹெப்பாளாவை சேர்ந்த மதுசூதன், 27 என்பவர் உட்பட ஏழு பேரை கைது செய்தனர். மதுசூதன், 2017ல் உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று, தலைமறைவானார். போலீசார் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதற்கிடையில், 2019 ஜூன் 12ல் தீர்ப்பு வந்தது. இதில் மதுசூதனனை தவிர்த்து மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை; ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுசூதனன், பெங்களூரில் உள்ள மால் ஒன்றில் நண்பருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை முகநுாலில் பதிவிட்டிருந்தார். தகவல் அறிந்த போலீசார், அந்த நண்பரை பிடித்து விசாரித்தனர். அவர் மூலமாக மதுசூதனனை கைது செய்தனர்.
வசித்தது எங்கே?
ஜாமினில் விடுதலையான மதுசூதனன், பீஹார் சென்று ராகுல் என பெயரை மாற்றி கொண்டு வசித்துள்ளார். பின், புனே சென்று வேலை செய்தார். இடையில் குடும்பத்தினரையும் தொடர்பு கொள்ளவில்லை; மொபைல் போனும் பயன்படுத்தவில்லை என்பதால் போலீசாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.சமீபத்தில் பெங்களூரு வந்து நண்பருடன் மால் உட்பட பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தார். அப்போது, எடுத்த போட்டோக்களை பதிவிட்டதால் சிக்கி கொண்டார்.