புதுடில்லி: காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடந்த சிந்தனையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதற்காக, மூன்று முக்கிய குழுக்களை, கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா அமைத்துள்ளார். இதில், அவருடைய மகன் ராகுல், மகள் பிரியங்காவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது விமர்சனத்தை எழுப்பியுள்ளது.
லோக்சபாவுக்கு, 2014ல் நடந்த தேர்தலில் இருந்து காங்கிரஸ் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாபில் ஆட்சியை இழந்ததுடன், அனைத்து மாநிலங்களிலும் படுதோல்வியை சந்தித்தது.
சிந்தனையாளர் கூட்டம்
'கட்சிக்கு நிரந்தர தலைமை வேண்டும்; அனைத்து நிலைகளிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்' என, குலாம் நபி ஆசாத் தலைமையில், 'ஜி - 23' எனப்படும், 23 அதிருப்தி தலைவர்கள், சோனியாவுக்கு ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தனர். ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்த வாதம் வலுப்பெற்றது.
இதையடுத்து சீர்திருத்த நடவடிக்கைகள் எடுத்து கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாக செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், மூன்று நாள் சிந்தனையாளர் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன்படி, கட்சியை வலுப்படுத்தவும், 2024 லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கவும், 13 முதல் 15ம் தேதி வரை சிந்தனையாளர் கூட்டம் நடந்தது.
ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த இந்தக் கூட்டத்தில், 400க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், குடும்பத்தில் ஒருவருக்கு பதவி, மக்களுடனான தொடர்பை புதுப்பிப்பது உள்ளிட்ட பல முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிருப்தி
மேலும், கட்சியை வலுப்படுத்த சில குழுக்களை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, சோனியா நேற்று, மூன்று குழுக்களை அமைப்பதாக அறிவித்தார். அரசியல் விவகாரங்களுக்காக ஒரு குழு; 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க, சிந்தனையாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்தும் பணிக் குழு; அக்., 2ல் நடக்க உள்ள பாரத ஒற்றுமை யாத்திரையை ஒருங்கிணைக்க குழு என, மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சோனியா தலைமையிலான அரசியல் விவகாரங்களுக்கான குழுவில், அவருடைய மகன் ராகுலுடன், ஜி - 23 எனப்படும் 23 அதிருப்தியாளர்கள் குழுவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மாவும் இடம் பெற்றுள்ளனர்.இவர்களைத் தவிர, மல்லிகார்ஜுன கார்கே, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால், ஜிதேந்திர சிங் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர்.
வரும், 2024 தேர்தலை சந்திக்கும் பணிக் குழுவில், சிதம்பரம், முகுல் வாஸ்னிக், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அஜய் மாகன், பிரியங்கா, ரந்தீப் சுர்ஜேவாலா, சுனில் கனகுலு ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.கட்சி கட்டமைப்பு, ஊடகத் தொடர்பு, மக்களுடனான தொடர்பு, நிதி, தேர்தல் நிர்வாகம் என, தனித்தனியாக இவர்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட உள்ளது. இந்தப் பிரிவுகளில், இவர்களின் கீழ் சிலர் நியமிக்கப்பட உள்ளனர்.
விமர்சனம்
இதில் சுனில் கனகுலு, தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு, அக்., 2ம் தேதி துவங்க உள்ள பாரத ஒற்றுமை யாத்திரையை ஒருங்கிணைக்கும் குழுவில், திக்விஜய் சிங், சச்சின் பைலட், சசி தரூர், ரவ்னீத் சிங் பிட்டு, கே.ஜே. ஜார்ஜ், ஜோதிமணி, பிரத்யுத் போர்தோலோய், ஜிது பட்வாரி, சலீம் அஹமது ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.
குடும்பத்தில் ஒருவருக்கு ஒரு பதவி உள்ளிட்ட பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குழுக்களில், சோனியா, அவருடைய மகனும் முன்னாள் தலைவருமான ராகுல், மகளும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். இது புதிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE