திருப்புத்துார் :திருப்புத்துார் ஒன்றியம் கீழச்சிவல்பட்டி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்ட பஸ்கள் தேசிய நெடுஞ்சாலையில் செல்வதால் போக்குவரத்துக்கு மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.மதுரையிலிருந்து -தஞ்சாவூருக்கு திருப்புத்துார் வழியாக செல்லும் பஸ்கள் கீழச்சிவல்பட்டி வழியாக இயங்கி வந்தன. சில ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது. இதனால் பஸ்கள் வழக்கமான நெடுஞ்சாலை ரோட்டிலிருந்து விலகி தேசிய நெடுஞ்சாலையில் செல்லத் துவங்கி விட்டன. அதில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கீழச்சிவல்பட்டியும் ஒன்று.தினமும் 62 பஸ்கள் கீழச்சிவல்பட்டிக்கு வந்து சென்ற நிலையில், தற்போது 12 பஸ்களே நகருக்குள் வந்து செல்கின்றன. காலையில் 7:00 மணிக்கு பின்னரே பஸ் வசதி கிடைக்கிறது. மேலும்இரவு 7:00 மணிக்கு பின் தாலுகா தலைநகரான திருப்புத்துார் செல்லக் கூட பஸ் வசதி இல்லை. 24 மணி நேரமும் பஸ் வசதி பெற்றிருந்த கீழச்சிவல்பட்டி தேசிய நெடுஞ்சாலை வருகையால் அந்த வசதியை இழந்து விட்டது. இதே போன்று திருப்புத்துார் புதுப்பட்டி, என்.புதுார் மக்களும் பஸ் வசதியை இழந்துள்ளனர். போக்குவரத்து அதிகாரிகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் பஸ்கள்செல்வதை கண்காணித்து சரியான வழியில் செல்ல அறிவுறுத்த வேண்டியது அவசியமாகும்.