கொட்டிகரே:''தற்போது நிலத்தின் வெப்பநிலை அதிகரித்து, இயற்கை வளம் பாதிக்கப் படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் மரக்கன்றை நட்டு சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்,'' என கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார்.
நாட்டின், 75ம் சுதந்திர தின ஆண்டை ஒட்டி, பிரம்மகுமாரிகள் சார்பில், பெங்களூரு கொட்டிகரேவில் தேசிய மரக்கன்றுகள் நடும், 'கல்பதரு' என்ற நிகழ்ச்சி நேற்று நடத்தப் பட்டது.
மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்த கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் பேசியதாவது:நிலையான விவசாயம், நீர் சுத்திகரிப்பு, மரம் நடுதல், எளிய மற்றும் நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கும் வகையில், பிரம்ம குமாரிகள், 'கல்பதரு' நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இதன் வாயிலாக, தனி நபர்கள் தங்கள் சுற்றுச்சூழல் பொறுப்பை புரிந்துகொள்ள ஊக்குவிக்கிறது.
மரக்கன்றுகளை நட்டு, அதை பாதுகாக்க வேண்டும். தண்ணீரின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொண்டு, அளவுடன் பயன்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாப்பதே நமது பணியாக இருக்க வேண்டும்.பிரம்ம குமாரிகள் என்பது உலகளாவிய ஆன்மிக அமைப்பாகும். இது ஒரு சமூக- ஆன்மிகம் மற்றும் சர்வதேச அரசு சாரா அமைப்பாகும். அமைதி மற்றும் உலகளாவிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களில் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலுடன் இணைந்து செயல்படுகிறது.
தற்போது நிலத்தின் மீது வெப்பம் அதிகரித்து, இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஒவ்வொருவரும் மரம் மற்றும் நீர் பாதுகாப்பை ஊக்குவிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.