சிவகங்கை :சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் தானியங்கி வானிலை ஆய்வு மையம்செயல்பட்டு வருவதாக கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.சிவகங்கை வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாகத்தில் உள்ள தானியங்கி வானிலை ஆய்வு மையத்தினை பார்வையிட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டாரங்களில் வேளாண்துறை சார்பில் தானியங்கி வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களில் காற்றின் வேகம், திசை வேகம், மண், காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை, மழை அளவு ஆகிவற்றினை அளவீடு செய்ய தனித்தனி உபகரணங்கள் நிறுவப்பட்டு கணக்கிடப்பட்டுவருகிறது.இந்த அளவீடுகளை அறிந்து கொள்வதற்கு இணைய வழியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு, ஒரு முறை காண்காணிப்பதற்கு ஏதுவாக இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வருவாய் மண்டல அலுவலகங்களிலும் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும் அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு. உரிய அளவில் அளவீடு செய்து வரைபடம் தயாரித்து பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.வரும் காலங்களில் இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களை பாதுகாக்க தேவையான தகவல் தொடர்பு சாதனங்களை நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.