இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்த குவாட்: மோடி

Added : மே 25, 2022 | |
Advertisement
டோக்கியோ : ''குவாட் அமைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 'குவாட்' அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக,நம் பிரதமர் நரேந்திர மோடி,இரண்டு நாள் பயணமாக ஜப்பான்
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்த குவாட்: மோடி


டோக்கியோ : ''குவாட் அமைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை உறுதி செய்துள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற 'குவாட்' அமைப்பின் மூன்றாவது மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக,நம் பிரதமர் நரேந்திர மோடி,இரண்டு நாள் பயணமாக ஜப்பான் சென்றார்.

இந்நிலையில் நேற்று காலை நடந்த குவாட் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:உலக அரங்கில், குவாட் அமைப்பு குறுகிய காலத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தில், குவாட் நாடுகள், ஒன்றுக்கொன்று தடுப்பூசிகளை வழங்கி உறுதுணையாக இருந்தன. காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு என பல தளங்களில், குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மையை, குவாட் அமைப்பு உறுதி செய்கிறது. குவாட் கூட்டமைப்பு ஸ்திரமான கொள்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இது இன்னும் வலுவான கூட்டமைப்பாக உருவாகும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:குவாட் அமைப்பு தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்படுகிறது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ, குவாட் அமைப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.கொரோனா காலத்தில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டோம். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரால், உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ய ரஷ்யா தடை விதித்தால், நிலைமை மேலும் மோசமாகும். உக்ரைன் மீதான போரை ரஷ்யா தொடரும் வரை, நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவாக இருக்கும்.இவ்வாறு பைடன் பேசினார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பேசுகையில், ''ரஷ்யா - உக்ரைன் போர், ஐ.நா., சபையின் கொள்கைகளுக்கு சவால் விடுத்துள்ளது. இந்தோ - பசிபிக் பகுதியில் இது போல் நடக்க, சிறிதும் அனுமதிக்க மாட்டோம்,'' என்றார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பேன்ஸ் பேசுகையில், ''குவாட் நாடுகளுடன் ஆஸ்திரேலியா. எப்போதும் இணைந்து பணியாற்றும்,'' என்றார்.

மேம்படுத்த நடவடிக்கை

ஜப்பான் பயணத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். இருவரும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி பேசினர். சந்திப்பு பற்றி பிரதமர் மோடி கூறுகையில், ''இந்திய, அமெரிக்க உறவு வலுப்பெற, தொடர்ந்து நம்பிக்கையின் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா வெளிப்படையாகவும் , திறந்த மனதுடனும் இருக்கிறது,'' என்றார். கொரோனா தடுப்பில் இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ''பூமியில் சிறந்த நட்புறவுக்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்கா - இந்தியா உறவு இருக்கும்,'' என்றார். இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள அந்தோணி ஆல்பேன்சை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, இரு தரப்பு உறவுகள் பற்றி பேசினார்.



பயங்கரவாதத்தை வேரறுக்க உறுதி

'குவாட்' மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப் பெரும் சவாலாக உள்ளது. பயங்கரவாதத்தை யாரும், எதற்காகவும் ஆதரிக்க கூடாது; பயங்கரவாதத்தை வேரறுக்க, குவாட் தொடர்ந்து பணியாற்றும்.இந்தியாவில், மும்பை, பதான்கோட்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு குவாட் கண்டனம் தெரிவிக்கிறது. இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை சீர்குலைக்கும் நோக்கில், யார் செயல்பட்டாலும், அதை குவாட் வலிமையாக எதிர்க்கும். பயங்கரவாதத்துக்கு அடுத்தபடியாக பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக உள்ளது. இதை குவாட் நாடுகள் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கரியமில வாயு குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் தற்போதுள்ள நிலையை மாற்றி, அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பிராந்தியத்தில் கடல் பகுதிகளின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நான்காவது குவாட் மாநாடு, அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



போர் விமானங்கள்

டோக்கியோவில் குவாட் மாநாடு நடந்த போது வான்வெளியில் ரஷ்யா, சீனா போர் விமானங்கள் பறந்ததாக, ஜப்பான் ராணுவ அமைச்சர் நோபுவோ கிஷி தெரிவித்துள்ளார்.இது பற்றி அவர் கூறியதாவது:குவாட் மாநாடு நடந்த பகுதியின் வான்வெளியில் ரஷ்யா, சீனாவின் போர் விமானங்கள் பறந்தன. இது பெரும் கவலையளிக்கிறது. எனினும், வான்வெளியின் எல்லைகளை விமானங்கள் மீறவில்லை. ஜப்பான் அருகே, ரஷ்யா மற்றும் சீனாவின் ஜெட் போர் விமானங்கள் இப்படி பறப்பது, கடந்த ஏழு மாதங்களில் இது நான்காவது முறை; உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஆக்கிரமிப்பு சிந்தனை உடைய சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கவலையளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X