வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
சி.ரமேஷ்குமார், பூலுவபட்டி, கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவில், இனி முதல்வர்கள், பிரதமர், அமைச்சர்கள் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என, யாரை கொல்வதாக இருந்தாலும், நீங்கள் தமிழர்களை அணுகலாம் என, பகிரங்கமாக 'போர்டு' வைத்து விடலாம். ஏனெனில், தமிழர்கள் கொலை செய்தால், அந்தக் குற்றத்தை இங்குள்ள அரசியல் கட்சியினர், தலையில் துாக்கி வைத்து கொண்டாடுவர்.
நீதிமன்றங்கள் மரண தண்டனையை விதித்தாலும், அதை ஆயுள் தண்டனையாக குறைக்க, ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சிகளும் சட்ட உதவி செய்வர்; பின், ஆயுள் தண்டனையிலிருந்து விடுவிக்கவும் ஏற்பாடு செய்வர். விடுதலையானதும் பதவிகள் கொடுத்து, திருமணமும் செய்து வைப்பர். குற்றவாளியின் குழந்தைகள் முதல், அவர்களின் குழந்தைகள் வரை நிதியுதவி செய்து, அந்த குடும்பத்தை இரண்டு, மூன்று தலைமுறைக்கு காப்பாற்றுவர். கொலை செய்தவரை குற்றவாளி என்று சொல்லாமல், 'பெரும் வீரன்' என்றும் பட்டம் கொடுத்து பாராட்டுவர்.
ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை, தமிழகத்தில் ஆளும் கட்சி உட்பட பல கட்சிகள் பாராட்டுவதையும், கொண்டாடுவதையும், போருக்குச் சென்ற வீரன் வெற்றியுடன் திரும்பி வருவது மாதிரி வரவேற்பு கொடுப்பதையும் பார்க்கும் போது, மேற்குறிப்பிட்ட தகவல்களையே, தமிழக அரசும், முதல்வரும், இந்திய சமுதாயத்திற்கும், உலக சமுதாயத்திற்கும் தெரிவிப்பதாக தோன்றுகிறது.

அதே நேரத்தில், விடுதலை செய்யப்பட்ட அந்தக் கொலை குற்றவாளியிடம், 'நீங்கள் கொலைக்கு உடந்தையா... ஏன் அப்படி செய்தீர்கள்?' என்று கேட்க, எந்த ஒரு பத்திரிகையாளருக்கும் திராணி இல்லை. மேலும், தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்காக தீர்க்க வேண்டிய பிரச்னைகள் எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் விடுத்து, உலகையே உலுக்கிய ஒரு கொடூர கொலை சம்பவத்தின் குற்றவாளியை, ஒரு வீராதி வீரனை போன்று கட்டியணைத்து முதல்வர் ஸ்டாலின் வரவேற்றது, தமிழகத்திற்கு வெட்கக்கேடான செயல்.
தி.மு.க., தலைவராக மட்டும் இருந்திருந்து, இப்படி செய்திருந்தால் கூட, அது அவரின் விருப்பம் என்றிருக்கலாம். முதல்வர் பதவியில் இருக்கும் போது, இப்படி வரவேற்றது தான், நடுநிலையாளர்கள் அனைவருக்கும் கேவலமான, அவமானமான விஷயமாக தோன்றுகிறது. ஒரு தேசத்தின் பிரதமராக பதவி வகித்த ராஜிவை, கொடூர குண்டு வெடிப்பின் வாயிலாக கொன்றதுடன், அவரின் உடலை சிதறு தேங்காய் போன்று அள்ளிச் செல்லும் கொடுமையை செய்தவர்களை மன்னிப்பதே பாவம். அவர்களை ஆதரிப்பவர்களை அதை விட பெரிய பாவிகளாகவே பார்க்க வேண்டும்.
ராஜிவின் மரணம், காங்கிரஸ்காரர்களுக்கு வேண்டுமென்றால் இன்று வலிக்காமல் இருக்கலாம். ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக எங்களுக்கு ரத்தக் கண்ணீர் வருகிறது. பேரறிவாளனை வரவேற்பவர்கள், தமிழர்களின் முகங்களாக எங்களுக்கு தெரியவில்லை; கொலைகாரர்களின் கூட்டாளிகளாகவே தெரிகின்றனர்.