மைசூரு:''பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் யோகா தின விழாவுக்கான இடத்தை, மத்திய குழு வந்து தேர்வு செய்வர்,'' என கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர் தெரிவித்தார்.
மைசூரில் ஜூன் 21ல் நடக்கவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இது குறித்து, கூட்டுறவு துறை மற்றும் மைசூரு மாவட்ட பொறுப்பு துறை அமைச்சர் சோமசேகர், நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்தார்.
பின், அவர் கூறியதாவது:பிரதமர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு, மைசூரு ரேஸ்கோர்ஸ், அரண்மனை வளாகம் உட்பட பல்வேறு இடங்களை பரிசீலித்து வருகிறோம். இந்த வாரத்துக்குள் மத்திய குழு நேரில் வந்து இடத்தை தேர்வு செய்வர்.பிரதமர் வருகையால், அனைத்து கட்சியினர் அடங்கிய குழு அமைக்கப்படும். முதல்வர் பசவராஜ் பொம்மை, வரும் 28, 29லும்; மத்திய பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, வரும் 30லும் மைசூருக்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளனர்.
கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த யோகா வல்லுனர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். பிரதமர் வருகை, வெறும் தேர்தல் நோக்கத்தில் பார்க்காமல், சுற்றுலா மேம்பாடு கோணத்திலும் பார்க்க வேண்டும்.இதன் மூலம் மைசூரு நகருக்கு உலக அளவில் பிரசாரம் கிடைக்கும். நகரில் உள்ள அனைத்து சாலை பள்ளங்களும் உடனடியாக மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.