தேசிய அளவில், தி.மு.க., மூன்றாவது அணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தானாகவே கூட்டணியில் இருந்து கழற்றிக் கொள்ளும் வகையில், தி.மு.க., செயல்பாடுகளில் புது மாற்றத்தை உணர முடிவதாக, தமிழக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய அரசியலில், பா.ஜ., காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்கும் முழக்கம், ஒவ்வொரு லோக்சபா தேர்தலுக்கு முன் ஒலிக்கும்.
உறவில் உரசல்
வரும் 2024ல் நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில், அந்த முழக்கம் முன்கூட்டியே ஒலிக்கத் துவங்கி விட்டது. ராஜிவ் கொலையாளி பேரறிவாளன் விடுதலைக்கு முன், தி.மு.க., - காங்கிரஸ் உறவில் இருந்த நெருக்கமும் இணக்கமும், விடுதலைக்கு பின் மாறி உள்ளது. மறைந்த கருணாநிதி சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைப்பதும், பேரறிவாளனுக்கு தேநீர் வழங்கி, அவரை முதல்வர் ஸ்டாலின் உபசரித்த செயலும், இரு கட்சிகளுக்கு இடையிலான உறவில் உரசலை அதிகப்படுத்தி உள்ளன.
'தி.மு.க., கூட்டணியில் இருந்து விலக வேண்டும்; தி.மு.க., கொடுத்த ராஜ்யசபா எம்.பி., சீட்டை திரும்ப கொடுக்க வேண்டும்' என, தமிழக காங்கிரசார், டில்லி மேலிடத்தை வலியுறுத்த துவங்கி உள்ளனர்.தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 'கூட்டணி என்பது கட்சியை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
'ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் அனைத்தும், கட்சியை பலவீனப்படுத்தி விட்டது என்பது உண்மை. 'கூட்டணி அரசியல், காங்கிரஸ் வளர்ச்சியை குறைத்து விட்டது. காங்கிரஸ் உரிய வளர்ச்சி பெறவில்லை' என, வேதனை தெரிவித்திருக்கிறார்.
மோசமான கட்டம்
தி.மு.க., மீதான கோபம் தான், அவரது இந்தப் பேட்டிக்கு பின்னணி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அழகிரியின் கருத்துக்கு பதிலடி கொடுக்க, தி.மு.க.,வினரும் துடித்தனர். முதல்வர் ஸ்டாலினிடம் மூத்த அமைச்சர் ஒருவர், இதற்கு அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு முதல்வர், 'அவரது கட்சியின் நிலைப்பாட்டையும், கருத்தையும் தெரிவிக்கிறார்.
அதற்கெல்லாம் நாம் எந்த பதிலும் தர வேண்டாம்' என, தடை போட்டு விட்டதாக தெரிகிறது. இல்லையேல், இரு கட்சிகளுக்கும் இடையிலான பந்தம், மிக மோசமான கட்டத்திற்கு போயிருக்கும் என்கின்றனர்.
இந்நிலையில், தமிழககாங்கிரஸ் தலைவர் அழகிரி, அவசர பயணமாக, டில்லி சென்றுள்ளார். மேலிட அழைப்பு காரணமாகவே, அவர் டில்லி விரைந்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜிவ் கொலைக் குற்றவாளி பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில், தி.மு.க.,வும், அதன் தலைமையும் நடந்து கொண்ட விதம் குறித்த விசாரிக்கவே, அவரை அழைத்திருப்பதாக, மேலிட வட்டாரத்திலும் சொல்லப்படுகிறது.
காங்கிரசின் உறவை விட, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை, தி.மு.க., பெரிதாக எடுத்துக் கொள்வது ஏன் என்பதுகுறித்த சந்தேகத்தை போக்கவும், ராஜ்யசபா எம்.பி., வேட்பாளர் பற்றி விவாதிக்கவும், அழகிரி அழைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அரசியல் நிற மாற்றம்
தமிழக காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:உ.பி., பஞ்சாப் உள்ளிட்டஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், அக்கட்சியை முதுகில் சுமப்பதை பெரும் சுமையாக தி.மு.க., கருதுகிறது. குஜராத், ஹிமாச்சல பிரதேசம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடையும் என, பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்திருப்பதால், அதன் முடிவுகளுக்கு பின், தி.மு.க.,விடம் கூட்டணி நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
பேரறிவாளன் விடுதலை விவகாரம், கருணாநிதி சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைப்பது போன்றவற்றின் வாயிலாக, காங்கிரஸ் தானாகவே கூட்டணியில் இருந்து வெளியேறட்டும் என, தி.மு.க., விரும்புவதாகவே தெரிகிறது. அதற்காகவே, தன் அரசியல் நிறத்தை மாற்ற துவங்கி விட்டது.
35 தொகுதிகளில் போட்டி
வரும் லோக்சபா தேர்தலில், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, சரத்பவார், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ், நவீன் பட்நாயக் உள்ளிட்ட மாநில கட்சிகள் இணைந்து, 240 தொகுதிகளை கைப்பற்றும் வகையில், மூன்றாவது அணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கான முயற்சியில் சந்திரசேகர ராவ் ஈடுபட்டுள்ளார். அவரதுமுயற்சிக்கு தி.மு.க., கை கொடுத்தாலும் ஆச்சரியமில்லை. அதற்காக, தமிழகத்தில்35 தொகுதிகளில், தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE