கடமையே கண்ணாய்!
'சிடி' கேஸ்ல சிக்கி பதவியை இழந்தவருக்கும், கத்தியான அமைச்சருக்கும் பல விஷயங்களில் கருத்து மோதல் இருக்கு. முக்கியமாக மாவட்டத்த பிரிக்கறதுல ரெண்டு பேரும் எதிரும் புதிருமா இருக்காங்க. இவங்க ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தும் முயற்சில தலைவர்கள் ஈடுபட்டுட்டு இருக்காங்க.
இது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த விஷயத்துக்கு எல்லாம் 'சிடி' காரரு கவலைப்படறா மாதிரி தெரியல.அவரு அமைச்சரவைல எப்படி இடம்புடிக்கிறதுன்னு தீவிரமாக இருக்காராம். இதுக்காக மேலிடம் முதல் அக்கம் பக்கத்து முதல்வர்கள் மூலமாக 'லாபி' ஆரம்பிச்சி இருக்காரு. அதோட தன்னை நம்பி வந்த ரெண்டு பேருக்கும் இன்னும் அமைச்சர் பதவி கிடைக்கல. அதனால தனக்கும், அவங்க ரெண்டு பேருக்கும் அமைச்சர் பதவி கேட்டு போராடிட்டு வராரு.கர்நாடகாவுல என்ன களேபரம் நடந்தாலும் அவரு மட்டும் தன்னுடைய கடமையில மட்டும் கண்ணும் கருத்துமாய் இருக்காறாராம்.
கோபம் ஏன்?
ஐந்து மாநிலத்துல தோல்வி அடைஞ்ச கட்சியானது கர்நாடகாவுல மட்டும்தான் ஏதோ பலமா இருக்கற மாதிரி தோணுது. அதுலயும் மாநில தலைவரும், எதிர்க்கட்சி தலைவரும் முதல்வர் பதவிக்காக நீயா.. நானான்னு போட்டி போட்டுட்டு இருக்காங்க.யாராச்சும் ஒருத்தரு விட்டு கொடுத்தா நல்லதுன்னு கட்சிக்காரங்க பேசிக்கறாங்க. எதிர்க்கட்சி தலைவரு இந்த முறை ஜெயிச்சு, இரண்டாவது முறையாக முதல்வராக துடிக்கிறாரு.ஆனா, அவரை எப்படியும் முதல்வராக விட கூடாதுன்னு மாநில தலைவரு திட்டம் போட்டு காய்களை நகர்த்திட்டு வராரு. அப்படி என்னதான் இருவருக்கும் பகைன்னு கட்சிக்காரங்க யோசிச்சாங்க.அதுல முக்கியமான விஷயம் ஒண்ணு தெரியவந்திருக்கு. இதுக்கு முன்ன எதிர்க்கட்சி தலைவரு முதல்வராக இருந்தப்போ, இப்போ மாநில தலைவரா இருக்கறவருக்கு முதல் 'கேபினட்ல'அமைச்சர் பதவி தரலியாம்.அதுக்கு அப்புறம் விஸ்தரிப்பு பண்ணும்போதுதான் பதவி கிடைச்சதாம். அப்போ முதல் ரெண்டு பேருக்கும் முட்டிக்கிட்டு இருக்காம். அது இப்போ முதல்வர் பதவி போட்டி வரை கொண்டு வந்து விட்டிருக்காம்.
பட்டியலால் அதிருப்தி!
கர்நாடகாவுல இப்போ ராஜ்யசபா, மேலவை தேர்தல் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிச்சி இருக்காங்க. இந்த பட்டியல்ல யாருமே எதிர்பார்க்காதவர்களுக்கு எல்லாம் டிக்கெட் கிடைச்சி இருக்கு.இந்த பட்டியலால ரெண்டு தேசிய கட்சிலயும் அதிருப்தி தான் இருக்கு.
முக்கிய கை கட்சில பலமா எழுந்திருக்கு. இத்தனைக்கும் முதல்வர் போட்டில இருக்கற ரெண்டு பேரோட ஆதரவாளர்களுக்குதான் டிக்கெட் கிடைச்சிருக்கு. டிக்கெட் கிடைச்சவங்கள்ல ஒருத்தரு முஸ்லிம் பிரமுகரு. இவரு மாநில தலைவரோட ஆதரவாளரு. அதோட ஏற்கனவே மூணு முறை பதவில இருந்தவரு.
இப்போ மறுபடியும் அவருக்கே கொடுத்திருக்காங்க.இதுக்கு முஸ்லிம் தலைவர்களே அதிருப்தி தெரிவிச்சி இருக்காங்க. ஏற்கனவே பல முஸ்லிம் தலைவர்கள் கட்சிக்காக உழைச்சி எந்த பதவியும் கிடைக்காம இருக்காங்க. அவங்களை எல்லாம் புறக்கணிச்சிட்டு பதவியை அனுபவிச்சவருக்கே கொடுத்தது ஏன்னு கோவத்துல இருக்காங்களாம்.
இங்கயும் குறைங்க!
சென்ட்ரல் கவர்மென்ட்டு வரியை குறைச்சதால பெட்ரோல், டீசல் விலையெல்லாம் குறைஞ்சி ஜனங்க சந்தோஷமாக இருக்காங்க. எல்லாரும் பிரதமரை பாராட்டி தள்ளுறாங்க. கதர் கட்சி கூட கருத்து சொல்ல போகல. ஆனா இங்க இருக்கற மாநில கட்சி தலைவருதான் எல்லா விஷயத்துலயும முந்திகிட்டு ஆளுங்கட்சி மேல கருத்து சொல்வறவாராச்சே, விடுவாரா?அவரு இத பத்தி சொல்லும் போது ஜனங்க எதிர்ப்பு பணிஞ்சி வரிய குறைச்சது நல்ல விஷயம்தான்.
அதே மாதிரி கர்நாடகாவுலயும் அவங்க கட்சி முதல்வரு வரியை குறைச்சா இன்னும் விலை குறையும்.அக்கம் பக்கத்துல தாமரை இல்லாத மாநிலத்துல எல்லாம் வரியை குறைச்சி ஜனங்க பாரத்தை குறைச்சிட்டு இருக்காங்க. ஆனா தாமரை ஆளும் மாநிலத்துல மட்டும் குறைக்கல. அக்கம் பக்கத்த பார்த்து கர்நாடக முதல்வரும் வரியை இன்னும் குறைக்கணுமுன்னு சொல்லி இருக்காரு.