பெண்கள், மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கான யோசனைகளை கூறுகிறார் சித்த மருத்துவர் சு.ரம்யா: வீட்டில் சமையல் செய்வது, குழந்தைகளை கவனிப்பது, வேலைக்கு செல்வது என, பல விதமான பணி நெருக்கடிகளுக்கு பெண்கள் ஆளாகின்றனர். அத்துடன், மாதவிடாய் கோளாறு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளையும் சந்திக்கலாம். இதனால், மன அழுத்தத்திற்கு ஆட்படுகின்றனர். பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று, புற்றுநோய்.
நம் உடலில் சாதாரணமாக இருக்கும் ஏதோ ஒரு செல், வெளிதுாண்டல்கள் காரணமாக மாறுபாடு பெற்று, பல செல்களாக மாறுவதே புற்றுநோய். அப்படி ஒரு செல், திடீரென மாற்றம் அடைய நிறைய காரணங்கள் உள்ளன. இப்போது, அந்தப் பட்டியலில், மன அழுத்தமும் இடம் பெற்றுள்ளது. நீடித்த, நாள்பட்ட மன அழுத்தம், நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைய முக்கிய காரணம்.
மேலும், ஆஸ்துமா, இதய நோய்கள், குடல் புண் மற்றும் வயிறு கோளாறுகள், செரியாமை, மலக்கட்டு, மாதவிடாய் கோளாறுகள், மனச்சிதைவு போன்ற வேறு பல நோய்களுக்கான அடிப்படை காரணமும் மன அழுத்தமே. எந்த நோய் ஆனாலும், வந்த பின் குணமாக்குவதற்கு பதில், வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று பார்ப்போம். காலையில் வெறும் வயிற்றில், இஞ்சி தேனுாறல் எடுத்துக் கொள்ளலாம்; இது, ஒரு சிறந்த அமில அடிப்படை நியூட்ரிலைசர். ஏழு அல்லது எட்டு மணி நேர பட்டினிக்கு பின், உடலில்மிகுந்து இருக்கும் ஆசிட் அளவை சரி செய்ய இது உதவும்.
வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். மேலும், பஞ்ச கற்ப விதிப்படி, கஸ்துாரி மஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய் தோல், நெல்லிக்காய் இவைகளை சம அளவு எடுத்து பொடித்து, பசுவின் பாலுடன் கலந்து கொதிக்க வைத்து தலையில் தேய்த்து வரலாம். உலர்ந்த திராட்சை, அதிமதுரம் சேர்த்து கஷாயம் செய்தோ அல்லது இவை ஊறிய தண்ணீரையோ குடித்து வரலாம்.வெண் பூசணிக்காயை வாரம் ஒருமுறை, கட்டாயம் சமையலில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம்.
சரியான அளவு துாக்கமும் மிக முக்கியம்; அத்துடன், தனி மனித ஒழுக்கமும் அதிமுக்கியம். மனதில் குற்றம் இல்லாதவராக இருக்க வேண்டும்; அதுவே சிறந்த அறம். நாம் செய்யும் அனைத்து செயல்களும், எப்போதும் சரியாகவே இருக்க வேண்டும் என்பது விதியல்ல. நம் தவறை நினைத்து வருந்தி, மன அழுத்தத்திற்கு உட்பட்டு மேற்கூறிய ஏதோ ஒரு நோய்க்கு இரையாக வேண்டுமா?
புது வீடு, புது உறவுகள், புதிய சூழ்நிலை போன்ற அனைத்தையும் சமாளிக்கும் ஆற்றல் பெற்றவர்கள் பெண்கள். அதேபோல மன அழுத்தத்தையும்வெற்றி கொள்ள வேண்டும்.