ஹுப்பள்ளி:ஹுப்பள்ளியில் லாரி மீது தனியார் பஸ் மோதியதில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேன் ஒன்று, தார்வாட் அருகே மரத்தில் மோதியதில், நான்கு சிறுவர்கள் உட்பட ஒன்பது பேர் பரிதாபமாக இறந்த சம்பவம், நான்கு நாட்களுக்கு முன் நடந்தது. இந்த துயரம் மறைவதற்குள், அதே மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் எட்டு பலியான சம்பவம் நடந்தது.
மஹாராஷ்டிரா மாநிலம், கொல்லாபுரத்தின் இச்சலகரஞ்சி என்ற பகுதியில் இருந்து, ‛நேஷனல் டிராவல்ஸ்' என்ற தனியார் சொகுசு பஸ், நேற்று முன்தினம் இரவு 11:40 மணிக்கு பெங்களூரு புறப்பட்டது.ஹுப்பள்ளி புறநகரின் தாரிஹாளா பைபாஸ் சாலையில், ஒற்றை பாதையில் நேற்று அதிகாலையில் பஸ் வேகமாக சென்று கொண்டிருந்தது.
முன்னால் சென்ற டிராக்டரை முந்தி செல்ல முயன்ற போது, வெங்காய மூட்டைகளை ஏற்றி எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், பஸ் அப்பளமாக நொறுங்கியது.ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணியர், இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர்.விபத்தில், பஸ் ஓட்டுனர் நாகராஜ் ஆச்சார், 56, லாரி ஓட்டுனர் அதாவுல்லா கான், 40, பாபாசோ சவுகலே, 59, தியான் பேக், 17, அக் ஷயா தவர், 28, ஆகிப், 40, அபாக், 40, மஸ்தான், 54, ஆகிய எட்டு பேர் உயிரிழந்தனர்.
மஹாராஷ்டிரா - 12, கர்நாடகா - 4, தமிழகம் - மற்றும் நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வர் என 21 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு ஹுப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பெரும்பாலானோரை, அவர்களது உறவினர்கள் நேற்று மதியம் மஹாராஷ்டிராவுக்கு அழைத்து சென்றனர்.
பிரதமர் நிவாரணம்
ஹுப்பள்ளி விபத்தில் இறந்தவர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 'இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாயும்; காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.கர்நாடகா அரசு தரப்பில், 'முதல்வர் நிவாரண நிதி'யிலிருந்து, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும், என முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.