சென்னை : \ அதிகாரிகள் அலைக்கழிப்பு செய்வதால், அகவிலைப்படி உயர்வை விரைந்து அறிவிக்க, கூட்டுறவு துறைக்கு உத்தரவிடுமாறு, முதல்வர் ஸ்டாலினுக்கு, ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போது, ரேஷன் கடை ஊழியர்களுக்கும் வழங்கப்படும். நடப்பாண்டு ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
அதை ரேஷன் கடை ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்குமாறு, மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டது. பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்தும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இம்மாதம், 13ல் சென்னையில் அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
அவர்களிடம் பேச்சு நடத்திய கூட்டுறவு அதிகாரிகள், 19ம் தேதிக்குள் அகவிலைப்படி உயர்வு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்; ஆனால் அறிவிக்கவில்லை. எனவே, சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில், நுகர்வோர் பணிக்கான கூடுதல் பதிவாளர் அருணாவை, நியாய விலை கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச் செயலர் தினேஷ்குமார் நேற்று சந்தித்து வலியுறுத்தினர்.