தரம் உயரும் ரயில் நிலையம்
பங்கார்பேட்டை ரயில் நிலையத்தில் மின் ஏற்றி எனும் 'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது. 150 ஆண்டுகள் பழமையான ரயில் நிலையம் தரம் உயர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன. நடைமேடைகள், ஓய்வறை, டிக்கெட் கவுன்டர், தங்கும் விடுதி என அனைத்தும் நவீனமாக்கப்படுகிறது.
பள்ளிகளில் யோகா
உலக யோகா தினம் குறித்து கோலாரில் மேற்கொள்ள வேண்டிய நிகழ்ச்சி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி கூறுகையில், ''பள்ளிகளில் விளையாட்டுக்கென நேரம் ஒதுக்குவது போல், யோகாவும் ஒரு பாடமாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்,'' என்றார்.
புதிய நீதிபதிகள் பதவியேற்பு
தங்கவயல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக வினோத்குமார், மஞ்சுநாத் ஆகிய இருவர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் நேற்று பதவியேற்றனர். தங்கவயல் வக்கீல்கள் சங்கத் தலைவர் ராஜகோபால் நாயுடு, துணைத் தலைவர் மணிவண்ணன் மற்றும பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
விபத்தில் ஒருவர் பலி
சீனிவாசப்பூர் பகுதியில் இருந்து முல்பாகலுக்கு வந்து கொண்டிருந்த கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சும், முல்பாகலில் இருந்து மல்ல சந்திராவுக்கு சென்ற இருசக்கர வாகனமும் முல்பாகலின் சாமினா நகரில் நேருக்கு நேர் நேற்று மோதிக் கொண்டன. இருசக்கர வாகனத்தில் சென்ற நாகராஜ், 35, என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கன்னட நாடகம்
கோலாரின் மத்தேர ஹள்ளி கிராமத்தில் 'சனி பிரபாவா' என்ற கன்னட சமூக நாடகம் நேற்று நடந்தது. நாடகத்தை ம.ஜ.த., தலைவர் ஸ்ரீநாத் துவக்கி வைத்தார். அவர் கூறுகையில், ''நாட்டில் மிக பழமையானது நாடக கலை; சமூக விழிப்புணர்வுக்கு நாடகம் பெரும் உதவியாக இருந்தது. நமது கலாசாரம், மொழி பெருமையை, நாடக கலை வளர்ந்தது. அறிவுப் பூர்வமாக சிந்திக்க வைத்தது. ஆன்மிகம், பகுத்தறிவை வளர்த்தது,'' என்றார்.
கிராம தரிசனம்
கிராம தரிசனம் என்ற மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சி வரும் 27 ல் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. சீனிவாசப்பூரின் எல்டூர் அருகே உள்ள நரசஹள்ளி கிராமத்தில் கோலார் மாவட்ட கலெக்டர் வெங்கட்ராஜு பங்கேற்கிறார். மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும், தாசில்தார் தலைமையில் கிராமங்களில் நிகழ்ச்சி நடக்கிறது.கோலார் தாலுகாவில் வக்கலேரி அருகே வெங்கடாபூர் கிராமத்திலும்; பங்கார்பேட்டை தாலுகாவில் பூதிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி கிராமத்திலும்,; மாலுார் தாலுகா லக்கூர் அருகே செலகனஹள்ளி கிராமத்திலும்; தங்கவயல் தாலுகாவில் ராபர்ட்சன்பேட்டை அருகே உள்ள கூட்லகல்லு; முல்பாகல் தாலுகா தாயலுார் அருகே சிக்ககுட்டஹள்ளியிலும் நிகழ்ச்சி நடக்கிறது.
சுகாதார சீர்கேடு
கோலாரின் 7வது வார்டின் கங்கம்மன பாளையாவில் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் ஒருவருமே மக்கள் நல பிரச்னைகள் பற்றி கண்டுகொண்டதே இல்லை என, மகளிர் சங்க தலைவர் பத்மாவதி குற்றம் சாட்டினார்.அவர் கூறுகையில், ''கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு, சிக்குன்குனியா நோய் தாக்கும் பீதி ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு இருப்பதை படம் பிடித்து நகராட்சி ஆணையர், மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தோம். கால்வாயில் சாக்கடை நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது,'' என்றார்.