சென்னை, : பா.ம.க., தலைவர் பதவியில், 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜி.கே.மணிக்கு, சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி, ராமதாஸ் மனைவி சரஸ்வதி, அன்புமணியின் மனைவி சவுமியா, பொதுச்செயலர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
ராமதாசும், அன்புமணியும் இணைந்து, ஜி.கே.மணிக்கு ஆளுயுர மாலை அணிவித்தனர். ராமதாஸ், தங்கப்பதக்கம் அணிவித்து கவுரவித்தார்.பின், ராமதாஸ் பேசியதாவது:பா.ம.க., தலைவராக, 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஜி.கே.மணியை பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை. 40 ஆண்டுகளாக என்னுடன் இடைவிடாது பயணிப்பவர். உழைப்பின் உருவத்தை ஓவியமாக வரைந்தால், அதில் மணியின் உருவம் தான் எனக்கு தெரிகிறது.காலையில் கன்னியாகுமரி, மாலையில் மதுரை, இரவில் சென்னை என்று, கட்சி பணி செய்யக்கூடிய ஓய்வறியா உழைப்பாளி. ஓய்வெடுங்கள் என்று நான் உரத்து சொன்னாலும், ஒருபோதும் கேட்க மாட்டார். 25 ஆண்டுகளாக பா.ம.க.,வை அவரிடம் ஒப்படைத்தேன்; சிறப்பாக வழிநடத்தி வருகிறார். அவரைப் போல ஒரு தொண்டர் எனக்கு வாய்த்தது, நான் பெற்ற பெரும் பேறு.இவ்வாறு அவர் பேசினார்.அன்புமணி பேசியதாவது:சிறு வயதிலேயே மனைவியை இழந்தவர் மணி. ஆனாலும், மகனை மிகச் சிறப்பாக வளர்த்தவர். அவரை போன்ற ஒரு உழைப்பாளியை பார்க்கவே முடியாது.சோதனையான காலகட்டத்திலும் உடன் இருப்பவர்கள் தான் உண்மையானவர்கள். ராமதாசுக்கும், பா.ம.க.,வுக்கும் சோதனைகள் வந்தபோது, உறுதியாக நின்றவர் மணி.இவ்வாறு அவர் பேசினார்.நிறைவாக பேசிய ஜி.கே.மணி, ''பல சோதனைகளை கடந்து, கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் ராமதாஸ். தமிழகத்தை மட்டுமல்ல; இந்தியாவையே ஆளும் அளவுக்கு நிர்வாகத் திறையும், ஆளுமைத் திறனும் பெற்றவர் அன்புமணி. பா.ம.க.,வுக்காக தொடர்ந்து உழைப்பேன்,'' என்றார்.
சிறப்பு பொதுக்குழு
சென்னை திருவேற்காடில், 28-ம் தேதி, பா.ம.க., சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில், புதிய தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அதற்கான தீர்மானத்தை, ஜி.கே.மணி முன்மொழிவார் என்றும், அக்கட்சியினர்தெரிவிக்கின்றனர்.