சென்னை, : பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர் கல்விக்கு ஆலோசனை தரும், 'தினமலர்' நாளிதழ் வழிகாட்டி நிகழ்ச்சி, நேற்று கோலாகலமாக துவங்கியது. அதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, உயர் கல்வியில் சேர்வதற்கான ஆலோசனை பெற்றனர்.பிளஸ் 2
முடித்த மாணவர்கள், உயர் கல்வி படிப்புகளில் சேர்வதற்கான ஆலோசனைகளை வழங்கும், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, சென்னை சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில், நேற்று கோலாகலமாக துவங்கியது.காலை, 10:00 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, காலை 9:00 மணி முதல், ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர்.
அவர்களுக்கு, 'தினமலர்' நாளிதழ் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில், பாடப்பிரிவு ஆலோசனைகள் அடங்கிய, வழிகாட்டி மலர் வழங்கப்பட்டன.கல்வியாளர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகள் இணைந்து, குத்து விளக்கு ஏற்றிய பின், தமிழ்த்தாய் வாழ்த்துடன் வழிகாட்டி நிகழ்ச்சி துவங்கியது. சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரராமன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், வழிகாட்டி துவக்க நிகழ்ச்சி மற்றும் முற்பகல் கருத்தரங்கில் தொடர்ச்சி 4ம் பக்கம்உயர் கல்விக்கு உதவும்...3ம் பக்கத் தொடர்ச்சிபங்கேற்றனர்.அவர்களை, 'தினமலர்' நாளிதழ் இணை இயக்குனர் லட்சுமிபதி ஆதிமூலம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.எண்ணற்ற ஆலோசனைகாலை, மாலை என இரு வேளைகளிலும், உயர் கல்வி கருத்தரங்கம் நடந்தது. 'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், இந்தியாவும், உலகமும் அடுத்த, 30 ஆண்டுகளில் எப்படி வளர்ச்சியடைய போகிறது; வாழ்க்கை முறை எவ்வாறு மாற போகிறது என்பதை, ஸ்ரீகிருஷ்ணா நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன் கிருஷ்ணமூர்த்தி விளக்கினார்.செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து, 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையும், மாணவர்கள் உயர் கல்வி பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தியும் விளக்கமாக பேசினர்.ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மாணவர்களின் கல்வி மற்றும் நுண்ணறிவு திறனை சோதிக்கும் வகையில், சிறிய போட்டி நடத்தி, மாணவர்களை உற்சாகம் அடையச் செய்தார்.
அவர், என்ன படித்தால் சிறந்த வேலைவாய்ப்பும், எதிர்காலமும் உள்ளது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.பிற்பகல் கருத்தரங்கில், 'காமர்ஸ்' பிரிவு படிப்புகள் குறித்து, ஆடிட்டர் சேகர், 'டிரோன்' தொழில்நுட்பம் குறித்து அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார், பல்வேறு வகை பாடப் பிரிவுகள் குறித்து பிரேமானந்த் சேதுராஜன் ஆகியோர், மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.ஒரே வளாகத்தில் நிறுவனங்கள்வழிகாட்டி நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக திகழும், கல்லுாரிகள், பல்கலைகளின் கண்காட்சி மற்றும் ஆலோசனை அரங்கை, கல்வி நிறுவன நிர்வாகிகள் 'ரிப்பன்' வெட்டி திறந்து வைத்தனர்.
கருத்தரங்கு முடிந்ததும் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், கல்லுாரிகள், பல்கலைகளின் அரங்குகளுக்கு சென்று, அங்கு பல்வேறு வகை படிப்புகள் மற்றும் அதற்கான வேலைவாய்ப்புகள் குறித்து, ஏராளமான தகவல்களை தெரிந்து கொண்டனர்.இந்த கண்காட்சி அரங்கில் இருந்த கல்லுாரி பிரதிநிதிகள், தங்கள் நிறுவனம் நடத்தும் படிப்புகள், மாணவர் சேர்க்கை முறை, கல்வி கட்டணம், விடுதி கட்டணம், படிப்புக்கு பின் கிடைக்கும் அரசு, தனியார் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனர்.பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு, எந்த படிப்பில் சேர்வது, என்ன படித்தால் எதிர்காலம் சிறப்பாகும் என்ற, பல்வேறு கேள்விகள் மற்றும் சந்தேகங்களுடன் வந்த மாணவர்கள், அவர்களின் பெற்றோருக்கு, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், தெளிவான ஆலோசனைகள் கிடைத்ததாக, மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.*
'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:மாணவர்கள் எதிர்காலத்தில் சாதிக்க வேண்டுமென்றால், நாம் புதிதாக யோசிக்க வேண்டும். எதையும் கேள்விப்படுவோராக இல்லாமல், கேள்வி கேட்போராக இருக்க வேண்டும். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்று ஆராய்ச்சி செய்து வந்ததை, நான் மாணவனாக இருந்தபோது படித்தேன். அப்போது, நிலவில் நீரில்லை என்ற முடிவை அறிவித்தனர்.ஆனால், ஆம்ஸ்ட்ராங் ஆராய்ச்சி செய்த இடத்தை தவிர, நிலவில் மற்ற இடத்தில் ஆய்வு செய்தனரா, அங்கு ஏன் தண்ணீர் இருக்க கூடாது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதன் முடிவாகத் தான், இஸ்ரோவில் இருந்து அனுப்பப்பட்ட, 'சந்திராயன்' செயற்கைக்கோள் ஆய்வு செய்து, நிலவில் தண்ணீர் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது. எனவே, நாம் சாதனையாளராக முயற்சிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.* ஸ்ரீ கிருஷ்ணா நிறுவனங்களின் சி.இ.ஓ., சுந்தரராமன் கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:தற்போதைய 'ஸ்மார்ட்' கருவிகளின் பயன்பாட்டை யாராவது நினைத்து பார்த்தோமா? கையடக்க கருவி, கைக்குள் உலகம், நொடிக்குள் நினைத்த பணிகளை முடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
2050ம் ஆண்டில், மனிதர்களே ஸ்மார்ட் மனிதர்களாகி விடுவர்.ஸ்மார்ட் கருவிகள் சொல்வதை செயல்படுத்தும் நிலை தான், மனிதர்களுக்கு ஏற்படும். இந்த ஸ்மார்ட் கருவிகளை இயங்க வைக்க மனிதர்கள், இன்னும் ஸ்மார்ட்டாக நுண்ணறிவு திறன் கொண்டவர்களாக மாறுவர்.எனவே, ஸ்மார்ட் உலக வளர்ச்சிக்கு, 'கம்ப்யூட்டர், புரோகிராமிங், ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ்' என, ஏராளமான தொழில்நுட்பங்கள் சார்ந்த படிப்புகள் தேவைப்படுகின்றன. எனவே, தொழில்நுட்பத்தின் எதிர்கால வளர்ச்சியையும், வேலைவாய்ப்புகளையும் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற தொழில்நுட்ப பாட பிரிவுகளை படியுங்கள்; சிறந்த எதிர்காலம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.* கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:தற்போது, இன்ஜினியரிங் படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும், இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது என்றும் கூறுகின்றனர். ஆனால், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் தகுதியுடைய மாணவர்களுக்கு, எதிர்பாராத சம்பளத்துடன் வேலை வழங்க நிறுவனங்கள் காத்திருக்கின்றன.தமிழ், ஆங்கிலத்துடன், கூடுதலாக அயல்நாட்டு மொழிகளைப் படிக்க வேண்டும். அதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் கல்லுாரிகளை தேர்வு செய்வது முக்கியம். வியாபாரம், வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட துறைகளில் 'டிஜிட்டல்' பரிவர்த்தனை முக்கிய பங்காற்ற உள்ளது.
விரும்பிய துறையை தேர்வு செய்வதை விட, வேலைவாய்ப்பு உள்ள துறையை படித்தால் தான், எதிர்காலத்தில் பிழைக்க முடியும்.தற்போது, 'பைனான்ஸ் மற்றும் பேங்கிங்' துறையுடன் தேவையான தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 'பிளாக் செயின், பின்டெக்' உள்ளிட்ட தொழில்நுட்பங்களை கற்பது அவசியம்.எந்த படிப்பை தேர்வு செய்தாலும், பாடப்புத்தகத்தையும், தேர்வு மதிப்பெண்ணையும் வைத்து, எதிர்காலத்தை வளமாக்க முடியாது. எவர் ஒருவர் புதிதாக கற்க தயாராகி, தன்னை மேம்படுத்தி கொள்கிறாரோ அவருக்கு மட்டுமே சிறப்பான எதிர்காலம் இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.* ஆடிட்டர் சேகர் பேசியதாவது:'சார்ட்டர்டு அக்கவுன்டன்சி, காஸ்ட் அக்கவுன்டன்சி, கம்பெனி செக்ரட்டரிஷிப்' ஆகிய வணிகவியல் சார்ந்த மேல்படிப்புகளுக்கு எப்போதும் வரவேற்பு உள்ளது. 'சார்ட்டர்டு அக்கவுன்டசி' என்பது, ஒரு நிர்வாகத்தின் வரவு, செலவு கணக்குகளை சட்டத்துக்கு உட்பட்டு தணிக்கை செய்வது.'காஸ்ட் அக்கவுன்டன்சி' என்பது, ஒரு பொருளின் உற்பத்திக்கான செலவை துல்லியமாக வரையறுத்து, அதன் விலையை நிர்ணயிப்பது. 'கம்பெனி செக்ரட்டரிஷிப்' என்பது, நிறுவனங்களின் நிர்வாகத்தை, நிர்வாக சட்டப்படி நிலைநிறுத்துவது.இந்த படிப்புகளைப் படிக்க, பிளஸ் 2 முடித்த உடனேயே நுழைவு தேர்வு எழுதி, படிக்க துவங்கி விடலாம். அதில் தேர்ச்சி பெற்று விட்டால், மேற்படிப்புக்கு சமமாகிவிடும். வணிகவியல் சார்ந்த படிப்புகளை நுணுக்கமாக படித்து தேர்வானால், எப்போதும் சிறப்பான எதிர்காலம் உண்டு.இவ்வாறு அவர் பேசினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், முற்பகல் மற்றும் பிற்பகலில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களிடம், 'தினமலர்' சார்பில், பொது அறிவு குறுந்தேர்வு நடத்தப்பட்டது. அதில் சரியான பதில் அளித்த மாணவர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, அவர்களில் தலா இரண்டு பேருக்கு, 'லேப்டாப், டேப்லெட்' மற்றும் 12 பேருக்கு 'வாட்ச்' பரிசுகளாக வழங்கப்பட்டன.மேலும், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி வழங்கிய, திறனறிதல் போட்டிக்கான வினாத்தாள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கு சரியான பதில்கள் எழுதி வரும், குறிப்பிட்ட மாணவர்களுக்கு இன்றைய நிகழ்ச்சியில் பரிசு வழங்கப்பட உள்ளது.வழிகாட்டியில் இன்று!வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று காலை, பிற்பகல் என, இரு வேளையிலும் உயர் கல்வி ஆலோசனை கருத்தரங்குகள் நடக்கின்றன.வேலைவாய்ப்பு திறன் குறித்து, ஐ.டி., நிறுவன மேலாளர் சுஜித்குமார்; வேலைவாய்ப்புக்கான, 'டாப்' படிப்புகள் குறித்து கல்வியாளர் ரமேஷ் பிரபா; இன்ஜினியரிங் படிப்பின் வேலைவாய்ப்புகள் குறித்து பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர்.சி.ஏ., படிப்பு குறித்து ராஜேந்திர குமார்; எலக்ட்ரானிக் வாகனம் மற்றும் ஆட்டோமேஷன் குறித்து செந்தில்ராஜா; அரசு வேலைவாய்ப்புகள் குறித்து நித்யா; ஐ.டி., மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகள் குறித்து டேவிட் ரத்னராஜ் மற்றும் உயர் கல்வி லட்சியங்களை அடைவது குறித்து தொழில் நிறுவனர் வேலுமணி ஆகியோர், ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE