ஊட்டி, : 'பசுமை தமிழகம்' திட்டத்தில் வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து, ஊட்டியில் பல்வேறு அரசு துறைகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.நீலகிரி மாவட்டம், ஊட்டி 'தமிழகம்' விருந்தினர் மாளிகையில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில், 'பசுமை தமிழகம்' திட்டத்தில், வனப்பரப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
அமைச்சர் ராமச்சந்திரன் பேசுகையில், ''2030 -- 31ம் ஆண்டுக்குள் தமிழக வனப்பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து துறை ஒருங்கிணைப்புடன், 2.50 கோடி மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு, பணி நடந்து வருகிறது.''அனைத்து துறையின் ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால், ஒவ்வொரு துறையும், தற்போதுள்ள காலி இடங்கள் குறித்த விபரத்தை ஜூன் 10க்குள் அளிக்க வேண்டும்,'' என்றார்.கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலர் சச்சின் உட்பட பலர் பங்கேற்றனர்.
அமைச்சர் மறுப்பு!
குன்னுார் ஜெகதளா அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:தற்போது படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக பலரும் கூறுகின்றனர்; அது நடக்க வாய்ப்பில்லை. நீலகிரி எம்.பி.,யாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மாஸ்டர் மாதன் இருந்தபோது இதற்கான முயற்சி நடந்தது. அப்போது, மத்தியில் இருந்து வந்த கமிட்டி, 'படுகர் நன்றாக படித்து, அரசு வேலையிலும், வர்த்தகம் செய்பவர்களாகவும் உள்ளதால், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை' என, அறிக்கை அளித்தது.எந்த கமிட்டி வந்தாலும், படுகர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை. உலகளவில் படுகர் மக்கள் பலர் உயர்ந்த நிலையில் உள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.