சென்னை, : சென்னையில் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், பங்கேற்ற அண்ணா பல்கலை பேராசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:'ட்ரோன்' தொழில்நுட்பம், தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 'மைக்ரோ ட்ரோன்' என்பது, மனிதர்கள் செல்ல முடியாத ஆபத்தான இடங்களில், நிவாரண பொருட்களை எடுத்து செல்ல உதவுகிறது.
நாட்டின் எல்லைகளில் ஊடுருவலை தடுப்பதற்கும், தடை செய்யப்பட்ட இடங்களில் அத்துமீறுபவர்களை கண்காணிப்பதற்கும், கோபுர கண்காணிப்பிற்கும் ட்ரோன்கள் பயன்படுகின்றன.பேரிடர் காலங்களில் சிக்கிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவும், வேளாண் நிலங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கவும், விதைகளை துாவவும் 'கிசான் ட்ரோன்' பயன்படுகிறது. ரோந்து பணிகளுக்கான 'சைரன்' ஒலியுடன் அறிவிப்புகளை தெரிவிக்கவும், ட்ரோன்கள் பயன்படுகின்றன.மூளைச்சாவு அடைந்தவர்களின், 30 கிலோ வரை உள்ள உடல் உறுப்புகளை, 150 கிலோ மீட்டர் வேகத்தில், பெங்களூரில் இருந்து சென்னை மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வகையில், ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.அடுத்த மூன்று ஆண்டுகளில், 5 லட்சம் 'ட்ரோன் பைலட்'கள் தேவை. பத்தாம் வகுப்பு முடித்த, 18 வயது முதல் 60 வயது வரை உள்ள அனைவரும், ட்ரோன் பைலட் படிப்பை மேற்கொள்ளலாம்.பத்து நாள் மட்டுமே பயிற்சி எடுத்து விட்டு, மாதம், 30 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.
எனவே, வேலைவாய்ப்பு அதிகம் உள்ள இந்த தொழில்நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். www.casrrpto.com என்ற இணையதள பக்கத்தில் மேலும் விபரங்களை பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கல்வி ஆலோசகர் பிரேமானந்த் சேதுராஜன் பேசியதாவது:மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெற்றோர் கட்டாயத்துக்காக, விருப்பமில்லாத படிப்பை தேர்வு செய்யக் கூடாது. எந்த கல்லுாரியை தேர்வு செய்கிறோமோ, அந்த கல்லுாரியின் அடிப்படை கட்டமைப்பு, ஆய்வக வசதிகள் உள்ளிட்டவற்றை உறுதி செய்து சேர வேண்டும். மேலும் தங்கள் பட்டப் படிப்புடன், மாணவர்கள், தங்களின் திறன் மேம்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் தேர்ந்தெடுக்கும் துறையில் சாதிக்க முடியும்.பெற்றோர், தங்களின் கனவுகளை, பிள்ளைகள் மீது திணிக்கக் கூடாது. பட்டப்படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும் மாணவர்கள், அதற்கான பயிற்சிகளை எடுத்து, தங்களை திறன்மிக்கவராக மாற்றிக் கொள்வது முக்கியம்.இவ்வாறு அவர் பேசினார்.