பெரம்பலுார், : -பெரம்பலுார் நகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்தாமல், நகராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் சினிமா பார்க்கச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பெரம்பலுார் நகராட்சி கூட்டம், தலைவர் அம்பிகா தலைமையில் நேற்று காலை 11:00 மணிக்கு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காலை 11:30 மணியாகியும், நகராட்சி தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் கூட்ட அரங்கத்துக்கு வரவில்லை.தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்டோர்,
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுடன், தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயநிதியின் படத்தை பார்க்கச் சென்று விட்டனர்.கூட்டத்துக்கு குறித்த நேரத்துக்கு வந்து காத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் சுயேச்சை கவுன்சிலர்கள் ஆத்திரமடைந்து, கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.இத்தகவல், நகராட்சி அலுவலர்கள் மூலம், நகராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் அவசரமாக கூட்ட அரங்கத்துக்கு விரைந்தனர். அங்கு யாரும் இல்லாததால், அனைத்து கவுன்சிலர்களுக்கும், போனில் தகவல் தெரிவித்து மீண்டும் வரவழைத்தனர்.பின், ஒரு மணி நேரம் தாமதமாக, பகல் 12:00 மணிக்கு நகராட்சி கூட்டம் துவங்கியது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.