ஆத்துார் : ''கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.சேலம் மாவட்டம், ஆத்துார், செல்லியம்பாளையத்தில், தி.மு.க., சார்பில், தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், தமிழகம் அனைத்து துறைகளிலும் பாதாளத்தில் சென்றதால், முதல்வர் பொறுப்பேற்ற போது ஒருவித தயக்கம் இருந்தது. ஆனால், நிதி நெருக்கடியில் இருந்து தமிழகம் தற்போது மீண்டு வருகிறது.
ஆன்மிகத்துக்கு எதிரான ஆட்சியாக, தி.மு.க., உள்ளதாக சிலர் அவதுாறு பிரசாரம் செய்கின்றனர்.தி.மு.க., ஒருபோதும் ஆன்மிகத்துக்கு எதிராக இருந்ததில்லை; இருக்கப் போவதும் இல்லை.அரசை விமர்சித்து அறிக்கை விடும் பழனிசாமி, அவரது ஆட்சியில், அவர் தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 1 லிட்டர் பெட்ரோல் விலையில், 3 ரூபாய் குறைத்தோம். இதன் மூலம், 1,160 கோடி ரூபாய் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், அதை மக்களுக்கான சலுகையாக அரசு ஏற்றது. மத்திய அரசு கலால் வரியை குறைத்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. மத்திய அரசு வரியை குறைக்கும்போது, மாநில அரசின் வரியும் குறையும். மத்திய அரசு இன்னும் விலையை குறைக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்க மாட்டேன்.இவ்வாறு அவர் பேசினர்.