ராமநாதபுரம், : தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 365 மீனவர் குடும்பங்களுக்கு மீன் பிடி தடைக்கால நிவாரணமாக தலா ரூ.5000 வீதம் ரூ.95 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.ராமநாதபுரம், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, சென்னை, கடலுார் உள்ளிட்ட 14 கடலோர மாவட்டங்களில் மீன்பிடி தொழில் நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகளவில் மீனவர்கள் தொழில் செய்கின்றனர். கடல் மீன்வளத்தை பாதுகாக்கவும், மீன் உற்பத்தியை பெருக்கவும் ஆண்டு தோறும் ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது. இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நாட்டுப்படகுகள், பைபர் படகுகளில் பாரம்பரிய முறைகளில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.
விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதால் இந்த படகுகளில் மீன்பிடி தொழிலுக்கு செல்லும் மீனவர் குடும்பங்கள் வருவாய் இன்றி பாதிக்கப்படுகின்றனர். இதற்காக ஆண்டு தோறும் தடைக்காலத்தில் மீன்பிடி தடைக்கால நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில் தற்போது நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தில் 37 ஆயிரத்து 986 மீனவர் குடும்பங்கள் பயன்பெறவுள்ளன. விரைவில் மீனவர்களின் வங்கி கணக்கில் நிவாரணத்தொகை வரவு வைக்கப்படவுள்ளது.--