வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் புகுந்த இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் அருகே யுவால்டே கவுண்டி என்ற நகரில் உள்ள ராப் தொடக்க பள்ளியில் புகுந்த மர்ம நபர் கண்ணில்பட்டவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டான். இதில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். தகவலறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்தனர்.
பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெக்சாஸ் மாகாண கவர்னர் கிரேக் அப்போட் கூறுகையில், இப்பள்ளியில் 500கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். 18 வயதுடைய இளைஞன் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளான். இதில் 18 மாணவர்கள், 1 ஆசிரியர்,மேலும் இருவர் என 21 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கியால் சுட்ட அந்த இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர் என்றார்.
பைடன் அதிர்ச்சி:
அமெரிக்க அதிபர் பைடன் குவாட் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார். நடந்த சம்பவம் குறித்து டெக்சாஸ் மாகாணவர் கவர்னருடன் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். இதற்கிடையே துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.