கடலுார்:கடலுார் அரசு மருத்துவமனைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து, வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேற்று மாலை மர்மநபர் ஒருவர், கடலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.இந்த தகவல் உடனடியாக, கடலுார் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, வெடிகுண்டு தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் மற்றும் மோப்ப நாய் கூப்பருடன் நேற்று இரவு 7:30 மணியளவில் அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, வாகனங்கள் நிறுத்துமிடம் என, மருத்துவமனை முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது.
மோப்ப நாயும் மருத்துவமனை முழுவும் மோப்பம் பிடித்தது.சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என, தெரியவந்தது.அதையடுத்து, போலீசார் அங்கிருந்து புறப்பட்டனர். ஒரே நேரத்தில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியதால் அரசு மருத்துவமனையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. நோயாளிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.