மாநகராட்சி பள்ளிகளை முன்னேற்றியது எப்படி? கல்விக்குழுவுக்கு பாடம் எடுத்தார் முன்னாள் தலைவர்| Dinamalar

மாநகராட்சி பள்ளிகளை முன்னேற்றியது எப்படி? கல்விக்குழுவுக்கு 'பாடம்' எடுத்தார் முன்னாள் தலைவர்

Added : மே 25, 2022 | |
கோவை மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்கள் குழுவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், முன்னாள் கல்விக்குழுத் தலைவரை சந்தித்து, அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.கோவை மாநகராட்சியின் கீழ், 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 13 நடுநிலைப்பள்ளிகள் மற்றும்42 ஆரம்பப்பள்ளிகள் உட்பட,83 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 850 ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். மற்ற
மாநகராட்சி பள்ளிகளை முன்னேற்றியது எப்படி?   கல்விக்குழுவுக்கு 'பாடம்' எடுத்தார் முன்னாள் தலைவர்

கோவை மாநகராட்சி கல்வி மற்றும் பூங்காக்கள் குழுவைச் சேர்ந்த கவுன்சிலர்கள், முன்னாள் கல்விக்குழுத் தலைவரை சந்தித்து, அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்தனர்.கோவை மாநகராட்சியின் கீழ், 17 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 13 நடுநிலைப்பள்ளிகள் மற்றும்42 ஆரம்பப்பள்ளிகள் உட்பட,83 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 850 ஆசிரியர்கள் தற்போது பணிபுரிகின்றனர். மற்ற மாநகராட்சிகளை ஒப்பிடுகையில், கோவை மாநகராட்சிப் பள்ளிகளின் தரமும், கட்டமைப்பு வசதிகளும் சிறப்பாக உள்ளன. பொதுத்தேர்வுகளில், கோவை மாநகராட்சி மாணவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.

மறக்க முடியாத பங்களிப்பு
இதற்கு, இங்குள்ள அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களின் கூட்டு முயற்சியும் முக்கியக் காரணமாகும். குறிப்பாக, 2011ல் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக, 2006-2011 வரையிலான ஐந்தாண்டுகளில் இருந்த மாநகராட்சி கல்விக்குழுவின் பங்களிப்பு, குறிப்பாகஅப்போதிருந்த மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் கல்யாணசுந்தரத்தின் செயல்பாடு, இதற்கு அடித்தளமாக அமைந்தது.அதற்குப் பின் ஐந்தாண்டுகள் இருந்த கல்விக்குழு, பெயரளவிலேயே செயல்பட்டது. 2016-2021 வரையிலான ஐந்தாண்டுகளில், மக்கள் பிரதிநிதிகளே இல்லாததால், மாநகராட்சிப் பள்ளிகளின் செயல்பாடுகளிலும், வளர்ச்சியிலும் சுணக்கம் ஏற்பட்டது.

வந்தாச்சு புதிய கல்விக்குழு!
இந்நிலையில், மீண்டும் தேர்தல் நடந்து புதிய கவுன்சில் பதவியேற்ற பின், கல்விக்குழுவுக்கும் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தி.மு.க.,வைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் மாலதி, கல்விக்குழுவின் தலைவராக உள்ளார்.அவர், பள்ளிகளில்ஆய்வுகள் நடத்தி, அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதிகாரிகளிடம் அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிகள் எடுத்து வருகிறார்.இவ்வாறு பள்ளிகளை ஆய்வு செய்யும்போது, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பலரும், 2006-2011 இடையிலான கல்விக்குழுவின் செயல்பாடுகள் குறித்து, தற்போதுள்ள கல்விக்குழுவினரிடம் பெருமையாகப் பேசியுள்ளனர். அப்போது நடந்த கூட்டங்களின் 'மினிட்' புத்தகங்களையும் காண்பித்து, அந்த காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும் விளக்கியுள்ளனர்.

வீட்டுக்கு அடித்தனர் 'விசிட்'
இதையறிந்த கல்விக்குழுவினர், முன்னாள் கல்விக்குழுத் தலைவர் கல்யாணசுந்தரத்தின் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று, அவரை சந்தித்து அவருடைய அனுபவங்களைக் கேட்டறிந்துள்ளனர். கல்விக்குழுவின் அதிகாரம், மாநகராட்சிப் பள்ளிகளின் தேவைகள், பிரச்னைகள் ஆகியவற்றை அவர்களுக்கு விளக்கிய கல்யாணசுந்தரம், தங்கள் காலத்தில் குழுவுக்கு ஏற்பட்ட பல்வேறு சோதனைகள், அவற்றைக் கடந்து கல்விக்குழு உண்டாக்கிய சாதனைகள் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.அவற்றைக் கேட்டு பிரமித்த கல்விக்குழு கவுன்சிலர்கள், தங்களால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்படுவதற்கு, முயற்சி எடுப்பதாக உறுதியளித்தனர். தற்போதுள்ள அரசியல் சூழலில், நல்லவர்களை, நேர்மையானவர்களை தேடிச்சென்று அனுபவத்தை அறிவதே நல்ல துவக்கம்தான்!

'உதவிய அனுபவங்கள்'

மாநகராட்சி கல்விக்குழுத் தலைவர் மாலதி கூறுகையில், ''உண்மையிலேயே கல்யாண சுந்தரத்தின் தலைமையிலான குழுவின் செயல்பாடும், முயற்சிகளும் எங்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின. குழுவையும், பள்ளிகளையும் சிறப்பாக வழிநடத்துவதற்கும், அவருடைய அனுபவங்கள் பேருதவியாக இருந்தன. அந்தளவுக்கு செயல்பட முடியுமா என்பது தெரியவில்லை. அதற்காக முயற்சி செய்வோம்,'' என்றார்.

-நமது நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X