வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையிலிருந்து பிற நகரங்களுக்கு தினமும் செல்லும் விமான சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கையும், ஓரிரு மாதங்களில் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையிலிருந்து, மும்பை, சென்னை, டில்லி, கோல்கட்டா, மங்களூரு, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு, நேரடி விமான சேவை உள்ளது. இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஸ்கூட், ஏர் அரேபியா, இண்டியன் ஏர்லைன்ஸ் விமான சேவைகளுடன் தற்போது விஸ்தாராவும் இணைந்துள்ளது.
கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விமானங்களின் எண்ணிக்கை, கோவிட் தொற்று நிலைக்கு முந்தைய அளவான, தினமும் 21 விமான போக்குவரத்து நிலையை எட்டியது. ஜனவரி முதல் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, கடந்த வாரத்தில் 24 ஆக உயர்ந்தது. புதியதாக துவக்கப்பட்டுள்ள விஸ்தாரா, டில்லிக்கும் கோவைக்கும் நேரடி விமான போக்குவரத்தை துவக்கியுள்ளது.

வரும் ஜூன் முதல் சென்னைக்கும் துவக்க உள்ளது. இந்த நிலையில், இண்டிகோ நிறுவனமும் சென்னைக்கு விமான சேவையை விரிவுபடுத்தவுள்ளது. ஜூலை 1 முதல் காலை 7:00 மணிக்கு சென்னைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 8:40 மணிக்கு புறப்பட்டு 9:40 மணிக்கு கோவையை வந்தடையும்.
இந்த சேவை, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது. காலையில் சென்னை சென்று, ஒரே நாளில் பணியை முடித்துக் கொண்டு, மாலையில் கோவை திரும்ப இது வசதியாக இருக்கும் என கருதுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE