கோவை: பெங்களூரு ஸ்டைலில், கோவையில், 'ஸ்மார்ட் ரோடு' மற்றும் 'ஸ்மார்ட் பார்க்கிங்' சிஸ்டம் உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள், பெங்களூரு சென்று வந்துள்ளனர்.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், கோவை ஆர்.எஸ்.புரம் டி.பி., ரோட்டில், பல கோடி ரூபாய் செலவழித்து, 'மாடல் ரோடு' உருவாக்கப்பட்டது. கோடிக்கணக்கில் செலவழித்தும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பானதாக அமையவில்லை. வழக்கமான சாலையாக காட்சி அளிக்கிறது.

தற்போது ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்ட சாலை, 'மாடல் ரோடாக' மாற்றப்படுகிறது. பசுமை பரப்பு அழிக்கப்பட்டு, கான்கிரீட் கற்களால் நடைபாதை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே ஊஞ்சல் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. வர்த்தக ரீதியாக விளம்பரம் செய்து, வருவாய் ஈட்டும் வகையில் வரிசையாக டிஜிட்டல் பலகைகள் நிறுவப்பட்டு இருக்கின்றன.
மோட்டார் இல்லாத நடைபாதை
அடுத்த கட்டமாக, பெரிய கடை வீதி, ராஜ வீதி, கிராஸ்கட் ரோட்டில், மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டிருக்கிறது. ரேஸ்கோர்ஸ் மற்றும் டி.பி.ரோட்டில் செய்தது போல் இல்லாமல், 'ஸ்மார்ட் ரோடு' உருவாக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா தலைமையில் உதவி பொறியாளர் சரவணக்குமார், விமல், கவுன்சிலர்கள் சுமா, முனியம்மாள் ஆகியோர் பெங்களூரு சென்றனர். அங்குள்ள சாலைகளில் பாதசாரிகளுக்கு ஏற்படுத்தியுள்ள வசதிகள், ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்த வசதி மற்றும் அறிவுசார் மையத்தின் செயல்பாடு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, திரும்பியுள்ளனர்.

இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூருவைப் போல், குடிநீர், பாதாள சாக்கடை குழாய், தொலைத்தொடர்பு ஒயர்கள் கொண்டு செல்ல தனித்தனி கட்டமைப்பு ஏற்படுத்தப்படும். மழை நீர் வழிந்தோட வழியேற்படுத்தப்படும்.அங்கு, 'ஸ்மார்ட் பார்க்கிங்' வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில், 'பெய்டு பார்க்கிங் சிஸ்டம்' செயல்படுத்த, ஆலோசித்து வருகிறோம். ஆர்.எஸ்.புரத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் செயல்பாட்டுக்கு வரும்போது, டி.பி.ரோட்டில் நிறுத்த தடை விதிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.