வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் வசித்து வருவதாக, அவரது உறவினர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர் தாவூத் இப்ராஹிம். இவரை, இந்தியா மற்றும் அமெரிக்கா, 2003ல் சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தன. மேலும், அவர் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு, 194 கோடி ரூபாய் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக, இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அவரைக் கைது செய்து ஒப்படைக்கும்படியும் கோரி வருகிறது. ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை விசாரிக்கிறது. இந்த வழக்கில், மும்பையில் வசிக்கும் தாவூத் இப்ராஹிமின் சகோதரி ஹசீனா பார்க்கரின் மகன் அலிஷா பார்க்கரிடம், அமலாக்கத் துறையினர் சமீபத்தில் விசாரித்தனர். அப்போது, தாவூத் இப்ராஹிம் கராச்சியில் வசித்து வருவதாக, அவர் கூறியுள்ளார்.
'தாவூத்துடன் எனக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை. அதே நேரத்தில், முக்கிய விழாக்களின்போது, தாவூத்தின் மனைவி மெஹஜாபின், என் மனைவி மற்றும் சகோதரிகளை தொடர்பு கொண்டு வாழ்த்து கூறுவார்' என, விசாரணையின்போது அலிஷா பார்க்கர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE