வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ‛இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும், அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை ராணிமேரி கல்லூரியில் மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார். பின்னர் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களை அவர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்வும் இணைந்து நடக்கும் சிறப்பு விழா இது. உணர்ச்சிமிக்க மாணவிகள் புடைசூழ இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அமைச்சர்கள் இணைந்து பணியாற்றும் பண்பு தொடர வேண்டும், மற்ற அமைச்சர்கள் இதனை பின்பற்ற வேண்டும்.
இந்தியாவிலேயே முதல்முதலாக துவங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. ராணிமேரி கல்லூரியை இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது மாணவிகளுக்கு ஆதரவாக பேசினேன். ஆனால் கல்லூரியின் கதவை தாண்டி குதித்ததாக அன்றைய தினம் நான் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ராணிமேரிக் கல்லூரிக்காக சிறை சென்றேன் என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம். இளைஞர்கள் என்றால் மாணவர்கள் மட்டுமல்ல, மாணவிகளும் தான். 18 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு இந்தியா.

இளைஞர் சக்தியை உருவாக்க கல்வியை தந்தாக வேண்டும், அடிப்படை கல்வி மட்டுமல்ல உயர்கல்வியும் தந்தாக வேண்டும். உயர்கல்விக்கு பிறகு வேலை, அதற்கேற்ற ஊதியம் ஆகியவற்றை தந்தாக வேண்டும். இந்த உழைப்பு சக்கரத்தை சரியாக தரும் அரசு தான் திமுக அரசு. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் என்று 2010ல் திமுக அரசு உருவாக்கியது. அன்று தேசிய அளவில் இத்தகைய திட்டம் செயல்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE