சென்னை: 'மேட்டூர் அணை தண்ணீர் வீணாகாமல், பாசனத்திற்கு பயன்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: சேலம், மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்காக, தண்ணீரை முன்கூட்டியே திறந்து விடுவதன் வழியாக, விவசாயிகள் அதிக பரப்பளவில் பயிரிடவும், சம்பா சாகுபடிக்கு தயாராகவும் வாய்ப்பாக அமையும். எனினும், தண்ணீர் வீணாகாமல், பாசனத்திற்கு பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படும் என கருதி, டெல்டா மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் செலவில், கால்வாய்கள் துார் வாரும் பணிகள் நடந்து வருகின்றன. மதகுகளை சீரமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. தஞ்சாவூர், பட்டுக்கோட்டை சாலையில், கல்லணைக் கால்வாய் கிளை ஆறுகளில், பாலங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
அடப்பன் பள்ளம் கீழ்ப்பாலத்தில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தருணத்தில் கல்லணை கால்வாயில் இருந்து, தணணீர் திறந்து விடப்பட்டால் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணை தண்ணீர், நாளை அல்லது நாளை மறுநாள் கல்லணையை வந்தடைய வாய்ப்புள்ளது. அங்கிருந்து அன்றே பாசனத்திற்கு தண்ணீரை திறந்தால், துார் வாரும் பணிகள் உள்ளிட்ட, அனைத்து கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு, தண்ணீர் வீணாகும் அபாயம் உள்ளது.
எனவே, மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் நீரை, முழுதும் பயன்படுத்தும் வகையில், நீரை தேக்கி வைப்பதற்கான, நீர் மேலாண்மை யுக்திகளை, அரசு கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.