வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: இந்தியாவின் முன்னணி நகரங்களில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலைகள் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் சராசரியாக 4% உயர்ந்துள்ளது. சென்னையில் 1% உயர்ந்துள்ளது.
இது பற்றிய தகவல்களை தொகுத்து ரியல் எஸ்டேட் கூட்டமைப்பான கிரெடாய் மற்றும்,கோலியர்ஸ், லியாசெஸ் போரேசெஸ் ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. அதன்படி, அதிகபட்சமாக டில்லி என்.சி.ஆர்., பகுதியிலுள்ள வீடுகளின் விலைகள் 11% உயர்ந்துள்ளன. அடுத்தப்படியாக ஐதராபாத்தில் விலை 9%, குஜராத்தின் ஆமதாபாத் நகரில் விலை 8%, கோல்கட்டாவில் 6%, புனேவில் 3%, மும்பை மற்றும் சென்னையில் 1% விலை உயர்வை கண்டுள்ளன.
வீடுகளின் சராசரி சதுரடி விலைப்படி பார்த்தால் நாட்டிலேயே மும்பை முதலிடம் வகிக்கிறது. இங்கு தான் வீடுகளின் விலைகள் மிக அதிகம். 2022 முதல் காலாண்டு தகவல் படி சராசரி விலை சதுரடி விலை மும்பையில் ரூ.19,557, ஐதராபாத்தில் ரூ.9,132, பெங்களூருவில் ரூ.7,595, புனேவில் ரூ.7,485, டில்லியில் ரூ.7,363, கோல்கட்டா ரூ.6,245, ஆமதாபாத் ரூ.5721 ஆக உள்ளன.

கோவிட் தொற்றுக்கு பின்னர் வீடுகளின் விற்பனையும் கணிசமாக வேகமெடுத்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 1% குறைந்துள்ளது. ஐ.டி., மற்றும் மின்னணு பொறியாளர்கள் அதிகம் உள்ள பெங்களூருவில் வீடுகள் விற்பனை சுறுசுறுப்படைந்துள்ளது. அங்கு விற்காத வீடுகளின் எண்ணிக்கை 23% குறைந்துள்ளது. இந்தியாவில் விற்பனையாகாத வீடுகளை பொறுத்தவரை, 32% மும்பையில் உள்ளது. தொடர்ந்து என்சிஆர் டில்லியில் 18 சதவீதம் மற்றும் புனேவில் 14 சதவீதம் உள்ளன. சென்னையில் 8% வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE