புதுடில்லி: பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து டில்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
ஜம்மு - காஷ்மீரில், பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்த வழக்கில், காஷ்மீர் பிரிவினைவாதிகள் யாசின் மாலிக், பரூக் அகமது தர், ஷபீர் ஷா, மசரத் அலாம், முகமது யூசப் ஷா உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், லஷ்கர் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபிஸ் சயீது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் சையது சலாஹுதீன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றன.

இந்நிலையில், 'இந்த வழக்கில், பிரிவினைவாதி யாசின் மாலிக், குற்றவாளி' என, டில்லி சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இவருக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. அப்போது, யாசின் மாலிக்குக்கு மரண தண்டனை விதிக்குமாறு என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் சார்பில் கோரப்பட்டது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், பயங்கரவாத குழுக்களுக்கு நிதி உதவி அளித்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீரில் பதற்றம்!
ஸ்ரீநகரின் மாய்சுமா என்ற இடத்தில் உள்ள யாசின் மாலிக் வீடு முன் அவரது ஆதரவாளர்கள் நேற்று திரண்டனர். மாலிக்குக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக சென்றனர். அவர்களை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதை அடுத்து போராட்டக்காரர்கள் கல் வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE