வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : 'ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி பேசும் கூட்டத்தினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: எந்த மதத்தையும் இழிவுப்படுத்துவதற்கு, இந்திய அரசமைப்பு சட்டத்தில் இடமில்லை. ஆனால், அதற்கு எதிரான சூழ்நிலை, தமிழகத்தில் நிலவுகிறது. இது குறித்து, அரசு வாய்மூடி மவுனியாக இருப்பது, வேதனை அளிக்கிறது. கந்த சஷ்டி கவசத்தை, 2020ம் ஆண்டு கருப்பர் கூட்டம் என்ற, 'யூ டியூப் சேனல்' இழிவுப்படுத்தியது. புகார் வந்ததும், கருப்பர் கூட்டம் நெறியாளரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததோடு, முஸ்லிம் மதத்தை இழிவுப்படுத்தி பேசிய, ஹிந்து தமிழ் பேரவையை சேர்ந்தவரையும், அ.தி.மு.க., அரசு, குண்டர் சட்டத்தில் கைது செய்தது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த கூட்டம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தை கொச்சைப்படுத்தி, விஜய் என்பவர் 'யு 2 புரூட்டஸ்' என்ற 'யூ டியூப் சேனலில்' அவதுாறு பரப்பி உள்ளார். பிற மதங்களை, பிறருடைய மத நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி பேசுவதை, அ.தி.மு.க., ஒருபோதும் ஏற்காது. எந்த மதத்தை இழிவுப்படுத்தி பேசினாலும், அதை அ.தி.மு.க., எதிர்க்கும்.
முதல்வர் என்பவர், கடவுள் நம்பிக்கை உள்ளோருக்கும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானவர். தி.மு.க., கடவுளுக்கு எதிரான கட்சி அல்ல எனக் கூறும் முதல்வர், ஹிந்து கடவுளை கொச்சைப்படுத்தி பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை, மக்கள் அதிர்ச்சியோடும், வேதனையோடும் பார்க்கின்றனர்.
இதுபோன்றவர்கள் மீது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழிவகுக்கும். எனவே, ஹிந்து கடவுள்களை தரக்குறைவாக விமர்சித்துள்ள, 'யு 2 புரூட்டஸ்' என்ற 'யூ டியூப்' சேனலை, உடனடியாக தடை செய்ய வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது, சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, அவர்களுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE