வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் போட்டியிடுவதாக, அக்கட்சியின் தலைமை கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஆறு எம்.பி.,க்களின் பதவி காலம் ஜூன் 29ல் நிறைவடைகிறது. அதனால், புதிதாக ஆறு எம்.பி.,க்களை தேர்வு செய்வதற்காக, தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த 24ம் தேதி துவங்கியது.
தற்போதுள்ள எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை அடிப்படையில், தி.மு.க., கூட்டணியில் நான்கு எம்.பி.,க்களையும், அ.தி.மு.க., கூட்டணியில் இரண்டு எம்.பி.,க்களையும் பெற முடியும். தி.மு.க., சார்பில் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஒரு இடம், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அக்கட்சியில் ஒரு பதவிக்கு பலத்த போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இரண்டு பதவிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும், அ.தி.மு.க., முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் போட்டியிடுவதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE