சென்னை : சென்னையை சேர்ந்தவர் ராதிகா, 50. திருமணமாகி 25 ஆண்டுகளாக குழந்தை இல்லை. பணம் சேர்த்து வைத்து, தனியார் குழந்தையின்மை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கருத்தரித்துள்ளார். ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தபோது, கால்கள் வீக்கம் அடைந்து, நெஞ்சில் நீர் கோர்த்த நிலையில், எழும்பூர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆலோசனைப்படி, மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
கருவில் குழந்தையின் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், அதற்கான சிகிச்சை மற்றும் குழந்தையின் நுரையீரல், மூளை வளர்ச்சிக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டு, 32 வாரத்தில் குறைமாத பிரசவத்தில், அறுவை சிகிச்சை வாயிலாக பிரசவம் நடந்தது. இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில், ஒரு மாதத்திற்கு, 'இன்குபேட்டர்' கருவியில் வைத்து, குழந்தைகள் பராமரிக்கப்பட்டன. தற்போது, தாயும், குழந்தைகளும் நலமுடன் உள்ளனர்.
47 வயது பெண்ணுக்கு குழந்தை
அதேபோல, 47 வயதான வள்ளி என்பவருக்கு, 17 ஆண்டுகளாக குழந்தை இல்லை. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் கரு நிலைத்தது. இவருக்கு எட்டாவது மாதத்தில் கால்களில் வீக்கமும், ரத்த கொதிப்பும் ஏற்பட்டதால், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவருக்கும் அறுவை சிகிச்சை வாயிலாக குறை மாதத்தில் பிரசவம் நடந்தது. குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. 'இன்குபேட்டர்' கருவி உதவியுடன் பராமரிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக குழந்தையின் எடையும் அதிகரித்தது. மேலும், வள்ளியின் ரத்த கொதிப்பும் சரி செய்யப்பட்டது.
இதுகுறித்து, மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறியதாவது: நவீன உலகில் அதிகரிக்கும் குழந்தையின்மை பிரச்னையை போக்க, 'ஐவிஎப் - ஐசிஐ' போன்ற செயற்கை கருத்தரிக்கும் நவீன சிகிச்சைகளை, அரசு மருத்துவமனைகளிலும் உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துள்ளது. முதற்கட்டமாக, சென்னை எழும்பூர் மற்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில், இதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருங்காலங்களில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்கும். இந்த மருத்துவமனையில் கடந்தாண்டு, 13 ஆயிரத்து 851 பிரசவங்கள் நடந்துள்ளன. அதில், 40 வயதுக்கு மேல் 26 பிரசவங்கள் நடந்துள்ளன. பெரும்பாலானவை சுக பிரசவமாக நடந்துள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE