வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை- ரயில் மோதி இறந்த 1,083 பேரில், 40 சதவீதம் பேர் மது, கஞ்சா போன்ற போதையில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
ரயில்வேயில் நடக்கும் விபத்துகள், ரயில் மற்றும் ரயில்வே 'கிராசிங்' விபத்துகள் என்று, இரண்டு வகையாக பிரிக்கப்படுகின்றன. இதில், ரயில்கள் மோதி ஏற்படும் இறப்பு, தற்போது குறைந்துள்ளது. ஆனால், பாதுகாப்பு விதிகளை மீறி, ரயில் பாதைகளைக் கடப்பது, மொபைல் போன் பேசியபடியே ரயில் பாதைகள் அருகே நடந்து செல்வது, சிக்னல் விதிகளை மீறுவது உள்ளிட்ட காரணங்களால் நடக்கும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதுபோன்ற உயிரிழப்புகள் மற்றும் குற்றங்களுக்கு, ரயில் நிலையங்கள் அருகேவுள்ள, 'டாஸ்மாக்' மதுக் கடைகளும் முக்கிய காரணமாக இருக்கின்றன. குறிப்பாக, சென்னை ரயில் கோட்டத்தில், எழும்பூர், மயிலாப்பூர், தரமணி, பழவந்தாங்கல், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், திருவள்ளூர், ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களின் அருகே, டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.
இந்த கடைகளில் மது பாட்டில்கள் வாங்கி, ரயில் பாதைகளில் அமர்ந்து மது குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ரயில் பாதைகளில் விதிமுறைகளை மீறுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கஞ்சா
சமீப காலமாக, ரயில் பாதையில் ஏற்படும் இறப்புகளுக்கு, மொபைல் போனில் பேசியபடியும், பாட்டு அல்லது வீடியோ பார்த்தபடியும், தண்டவாளத்தை கடந்து செல்லுதல், ரயில் பாதை அருகே அமர்ந்து, மது அருந்தி மயங்கி விழுதல் உள்ளிட்டவை, முக்கியக் காரணங்களாக உள்ளன. விதி மீறி ரயில் பாதையை கடந்து சென்றதால், 2020ல் 329 பேர் மற்றும் 2021ல் 602; இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையில் 152 பேர் என, மொத்தம் 1,083 பேர் இறந்துள்ளனர்.
இதில், 40 சதவீதம் பேர், கஞ்சா, மது போன்ற போதையில் இருந்தவர்கள். பயணியரின் மொபைல், நகை, பணம் திருட்டு போன்ற குற்றங்கள் நடப்பதற்கு, இங்குள்ள மதுக் கடைகள் காரணமாக இருக்கின்றன. அதனால், ரயில் நிலையங்களின் அருகே 100 மீட்டர் வரையில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று, தமிழக அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.ரயில்வே போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:ரயில் பாதைகள் திறந்தவெளியில் இருப்பதால், சிறுவர்கள், வாலிபர்கள் சிலர் குழுவாக வந்து, இங்கு மது குடித்து மயங்கிக் கிடக்கின்றனர். சிலர், கஞ்சா போதைக்கு அடிமையாகி, கவனக்குறைவாக ரயில் பாதையை கடந்து செல்லும்போது ரயிலில் அடிபட்டு இறக்கின்றனர்.
பரிந்துரை
மொத்த விபத்து உயிர் இழப்புகளில், 40 சதவீதம், போதையில் இருக்கும்போது தான் நடந்துள்ளன. எனவே, ரயில் பாதையை ஒட்டி இருக்கும் சிறிய சந்து வழிகளை அடைக்க வேண்டும் என, ரயில்வேக்கு பரிந்துரை செய்துள்ளோம்.ரயில் பாதைக்குள் யாரும் எளிதில் நுழைய முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கவும் யோசனை தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE