மத்திய அமைச்சராக இருந்த, தன் தந்தை சிதம்பரம், 75, செல்வாக்கை பயன்படுத்தி, சீன நாட்டினர் 263 பேருக்கு, சட்ட விரோதமாக, 'விசா' பெற்றுத் தந்த விவகாரத்தில், சிவகங்கை எம்.பி., கார்த்தி சிதம்பரம், 50, அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன், 55, உள்ளிட்டோர் மீது, சி.பி.ஐ.,யை தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிந்து, 'சம்மன்' அனுப்ப உள்ளனர்.
காங்., மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, தற்போது சிவகங்கை தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இவர் மீது, ஏராளமான ஊழல் புகார்கள் உள்ளன. இவரது தந்தை மத்திய அமைச்சராக இருந்தபோது, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி, வெளிநாடுகளில் இருந்து, 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைக்க உதவினார். இதன் பின்னணியில் கார்த்தி இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல, 2006ல், 'மேக்சிஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'குளோபல் கம்யூனிகேஷன் சர்வீஸ் ஹோல்டிங்ஸ்' சார்பில், 'ஏர்செல்' நிறுவனத்தில், 3,500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதற்கு, மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் விதிகளை மீறி அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் வாயிலாக அனுமதி அளித்தார். இதன் திரைமறைவில் கார்த்தி இருந்துள்ளார் என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்தனர். கார்த்தி, சிதம்பரம் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்தனர். இந்நிலையில், இந்த மோசடிகள் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள், சிதம்பரம், கார்த்தி மற்றும் இவர்களின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
பாஸ்கர ராமன் வீட்டில் சிக்கிய ஆவணம் ஒன்றில், 'சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது, இவரது மகன் கார்த்தி, தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி, சீன நாட்டினர் 263 பேருக்கு சட்ட விரோதமாக, விசா பெற்றுத் தந்தார்' என்ற குறிப்பு சிக்கியது. இதன் அடிப்படையில், சி.பி.ஐ., அதிகாரிகள், கார்த்தி, பாஸ்கர ராமன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது, வழக்குப்பதிவு செய்தனர்.
சமீபத்தில், கார்த்தி, பாஸ்கர ராமன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் என, 18 இடங்களில், பல மணி நேரம் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில், பாஸ்கர ராமனை கைது செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லிக்கு அழைத்துச் சென்று, நான்கு நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரித்தனர். அப்போது, சட்ட விரோத விசா விவகாரத்தில், கார்த்திக்கு, 50 லட்சம் ரூபாய் லஞ்சமாக தரப்பட்டது குறித்து, பாஸ்கர ராமன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கார்த்தி, வெளிநாட்டில் இருந்ததால், கைது நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. தற்போது அவர், தமிழகம் திரும்பி உள்ளார். இவர், நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், 'சீன நாட்டினருக்கு சட்ட விரோதமாக விசா பெற்றுத் தந்த விவகாரத்தில், நேரடியாகவோ, மறைமுகமாகவோ எனக்கு தொடர்பு இல்லை; என் மீது சி.பி.ஐ., பொய் வழக்கு போட்டுள்ளது' என, கூறியுள்ளார்.
ஆனால், 'கார்த்தி தவறு செய்து இருப்பதற்கான வலுவான ஆதாரம் சிக்கி உள்ளது. இவர் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது' என, சி.பி.ஐ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கார்த்தி மற்றும் பாஸ்கர ராமன் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது பற்றி, அமலாக்கத் துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர். அதற்கான ஆதாரங்கள் கிடைத்து இருப்பதால், கார்த்தி, பாஸ்கர ராமன் மீது வழக்குப் பதிவு செய்ய உள்ளனர். பின், முறைப்படி 'சம்மன்' அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE