டில்லியில் காங்கிரஸ் தற்காலிக தலைவர் சோனியாவை, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அவரது மகன் கார்த்தியும், நேற்று மாலையில் திடீரென ஒன்றாக சந்தித்துப் பேசினர்.
ராஜ்யசபா தேர்தலில், காங்., வேட்பாளர் யார் என்ற இழுபறி அக்கட்சியில் நீடித்து வருகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்., செயலர்கள் விஸ்வநாதன், சி.டி.மெய்யப்பன் ஆகியோரின் பெயர் பட்டியலை, தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் குண்டுராவ், சோனியாவிடம் வழங்கி உள்ளார். இந்த நால்வரில் யாரை தேர்வு செய்வதில் என்பதில் இழுபறி நீடித்தது.
சமீபத்தில், சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. சமீபத்தில், லண்டனுக்கு ராகுல் சென்றிருந்தார். அதே நேரத்தில் கார்த்தியும், தன் மகள் படிப்பு விஷயமாக லண்டன் சென்றிருந்தார். இருவரும், அங்கு தனியாக சந்தித்து பேசினர். அதன்பின், சோனியாவை நேற்று அவரது இல்லத்தில் சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் ஒன்றாக சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பு குறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது: சிதம்பரத்திற்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கவே இந்த சந்திப்பு நடந்துள்ளது. தமிழக காங்., தலைவர் பதவிக்கு, தன் ஆதரவாளர்கள் பட்டியலையும் சிதம்பரம் வழங்கி இருக்கலாம். சி.பி.ஐ., தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளித்திருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -