உடுமலை : மத்திய அரசின், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டத்தில், குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு அலுவலருக்கு, 'ஆன்லைன்' தகுதித்தேர்வு நடந்து வருகிறது.தொழில் நிமித்தமாக, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களுக்கு செல்லும் மக்கள், அத்தியாவசிய பொருட்களை பெற்று பயன்பெறும் வகையில், 'ஒரே நாடு ஒரே ரேஷன்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் அதிகம் பயன்பெற்று வருகின்றனர். மாவட்டத்தைச்சேர்ந்த, 35 ஆயிரத்துக்கும் அதிகமான வெளிமாவட்ட மக்கள், ரேஷன் பொருட்கள் பெறுகின்றனர்.இத்திட்டம் குறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களும், தொழில்நுட்ப பணியாளரும் புரிந்து கொள்ள வேண்டுமென, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதற்காக, தொழில்நுட்ப திட்ட பிரிவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு, 'ஆன்லைன்' தகுதி தேர்வு நடந்து வருகிறது.இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் பிரிவினர் கூறியதாவது:
'ஒரே நாடு ஒரே இந்தியா' திட்டத்தை செயல்படுத்த, அலுவலர்கள் முழுமையான விழிப்புணர்வு பெற வேண்டும்.அதற்காக, மத்திய அரசு, தொழில்நுட்ப பிரிவு மேலாளர் மற்றும் திட்ட அலுவலர், வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு, 'ஆன்லைன்' தேர்வு நடத்தி வருகிறது. இத்தேர்வில், இத்திட்டம் தொடர்பான வீடியோக்கள் ஒளிபரப்பு செய்து, தலா, 10 மதிப்பெண் உள்ள, 10 கேள்விகள் கேட்கப்படுகிறது.அதில், 80 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, தேர்ச்சி பெற முடியும். இதனால், முழு கவனத்தையும் தேர்வில் செலுத்தி வருகிறோம். இவ்வாறு, தெரிவித்தனர்.