ஆலாந்துறை : தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், செங்கல் சூளைகளுக்காக, அனுமதியின்றி செம்மண் வெட்டியெடுத்து, மர்ம நபர்கள் கனிம வளத்தை கொள்ளையடித்து வருகின்றனர். இது நன்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது, இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை தடாகம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வந்தன. இந்த சூளைகளுக்காக, விவசாய நிலங்களில் இருந்து செம்மண் எடுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில், எவ்வித அனுமதியும் இன்றி, 50 அடி ஆழமாக தோண்டி மண் எடுத்தனர். அரசு விதிகள் காற்றில் பறந்ததோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலுக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில், மண் கொள்ளை மாறியது. இதுகுறித்து பலரும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், ஐகோர்ட் உத்தரவுபடி, கடந்தாண்டு, மார்ச் மாதம் தடாகம் பகுதியில் அனுமதியின்றி, விதிகளை மீறியும் இயங்கி வந்த, 197 செங்கல் சூளைகள், மாவட்ட நிர்வாகத்தால் 'சீல்' வைக்கப்பட்டன. இதனால், தடாகத்தில் செங்கல் சூளைகளின் ராஜ்ஜியம் முடிவுக்கு வந்தது.
இதோ புதிய சூளைகள்!
இந்நிலையில், கோவையின் மேற்கு புறநகர் பகுதியான, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், கடந்த ஆண்டு முதல், 10க்கும் மேற்பட்ட புதிய செங்கல் சூளைகள் உருவாகியுள்ளன. இந்த செங்கல் சூளைகள், எவ்வித அனுமதியும் பெறாமல் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆலாந்துறையை அடுத்த காளிமங்கலம் கிராமத்தில், வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல், மர்ம நபர்கள் சிலர் பொக்லைன் மற்றும் ஜே.சி.பி., இயந்திரங்களை பயன்படுத்தி, செம்மண் வெட்டி எடுத்து வருகின்றனர்.
செம்மண் ஏற்றி செல்லும் லாரிகள், காளிமங்கலம், முகாசிமங்கலம், வடிவேலம்பாளையம், பூலுவபட்டி சாலையில், இரவும், பகலுமாக பறந்து வருவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது, 15 அடிக்கு ஆழமாக தோண்டி மண் எடுத்துள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இந்த இடம் வனப்பகுதியை ஒட்டியுள்ளதால், வன விலங்குகளுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

எதுவும் தெரியாத அதிகாரிகள்
இரவு, பகலாக செம்மண் கொள்ளை நடக்கும்போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், கனிம வளத்துறையும், வருவாய்த்துறையும் கண்டும் காணாமல் உள்ளது. அரசியல் கட்சிகளின் ஆதரவுடன், நடக்கும் இந்த கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருக்க, அதிகாரிகளுக்கும் 'கவனிப்பு' நடக்கிறது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த தடாகமாக, தொண்டாமுத்தூர் வட்டாரம் மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.இதுகுறித்து, ஆலாந்துறை வருவாய் அலுவலர் முத்துகிருஷ்ணனிடம் கேட்டபோது, "மண் எடுக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. புதிய செங்கல் சூளைகளுக்கும் அனுமதி கொடுக்கவில்லை. மண் எடுப்பது குறித்து விசாரிக்கிறோம்," என்றார். விசாரிப்பது மட்டுமல்ல; மண் எடுப்பதையும், விதிகளை மீறி புதிய செங்கல் சூளைகள் உருவாவதையும் தடுக்க வேண்டும்!
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE