அவிநாசி ராயம்பாளையம் காலனியில் வசித்து வந்த பரிமளா என்ற, பேரூராட்சி தற்காலிக கொசு ஒழிப்பு பணியாளர், கந்து வட்டி, கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டது, அவிநாசி பகுதியில் பெரும் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, அப்பகுதியினர் கூறியதாவது:சொற்ப சம்பளம் வாங்கும் பலர் துாய்மை பணியாளர்களாகவும், கூலித் தொழிலாளிகளாகவும் தான் உள்ளனர். வாழ்வாதாரத்துக்கு பணம் போதாத நிலையில், வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். வாரம், 10 ரூபாய் வட்டி என்ற அடிப்படையில், வட்டி தொழில் செய்வோர் பணம் தருகின்றனர்.வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டாலோ, வருமானம் தடைபடும் போது, வட்டி செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது கடன் தொகை அதிகரித்து, வட்டி சுமையும் அதிகரிக்கிறது.
பதிவின்றி 'சீட்டு'
ஊருக்குள் பலரும் சீட்டு நடத்துகின்றனர். சட்ட ரீதியாக பதிவு செய்து கொள்வதில்லை. சேமிப்பு திட்டத்தில் இணைய விரும்பும் மக்களின் பெயரில் 'சீட்டு' கணக்கு துவங்காமல், சீட்டு நடத்துபவரின் பெயரில் தான் கணக்கு துவங்கப்படுகிறது.சேமிப்பு திட்டம் முடிவடையும் தருவாயிலோ அல்லது இடையிலோ சீட்டு தொகையை பெற விரும்பினால், சம்மந்தப்பட்ட நபருக்கு தொகையை வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அப்பணத்தை நம்பி சில திட்டமிடல்களை வகுத்துக் கொண்ட மக்கள், வேறு வழியின்றி, வட்டிக்கு கடன் வாங்கி சிக்கி கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமும், 30 ரூபாய் வட்டி
கைகாட்டிபுதுார் வார சந்தை உள்ளிட்ட சந்தைகளுக்கு வரும் வியாபாரிகள் பலர், தினமும், 30 ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்து, அளவுக்கு அதிகமான பணத்தை வசூலிக்கின்றனர். அதாவது, காலையில், 1,000ரூபாய் கடன் வாங்கினால், மாலையில், 1,300 ஆக திருப்பி கொடுக்க வேண்டும்.இவ்வாறு, நாள் வட்டி, மீட்டர் வட்டி, 'ஹவர்' வட்டி என பல முறைகளில் வட்டித்தொழில் அவிநாசி, சேவூர் உட்பட வட்டாரத்தில் மட்டுமல்ல, திருப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் கொடி கட்டி பறக்கிறது.
தீர்வுதான் என்ன?
கந்துவட்டி தொழிலில் யாரும் ஈடுபடக்கூடாது; கந்து வட்டியில் சிக்கி, மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையை தவிர்க்க, கிராமம் தோறும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்பாதிப்பு வந்தபின், அவர்களுக்காக குரல் கொடுப்பதை காட்டிலும், கந்துவட்டியில் சிக்கி தவிக்கும் குடும்பத்தினரை, முன் கூட்டியேமீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.அதிகாரி சொல்வதென்ன?
டி.எஸ்.பி., பவுல்ராஜ் கூறியதாவது:கந்து வட்டிக்கு கடன் வாங்கி, 'டார்ச்சரு'க்கு உள்ளாவோர் போலீசில் புகார் கொடுக்கலாம். அதன் பேரில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி மட்டுமின்றி, போதை பொருள் புழக்கம், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தவிர்ப்பது தொடர்பாகவும் கிராமங்கள் தோறும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகையவிழிப்புணர்வு தொடர்ந்து வழங்கப்படும்; துணிந்து, புகார் அளிக்க வேண்டும்.இவ்வாறுஅவர் கூறினார்.