டோக்கியோ,-ஜப்பானைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு, ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற வினோத ஆசை ஏற்பட்டது. இதற்காக, 12 லட்சம் ரூபாய் செலவழித்து, அவர் நாய் போல் மாறியுள்ளார்.
ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த, டோகோ என்ற இளைஞர், சமீபத்தில் சமூக வலைதளம் ஒன்றில் 'வீடியோ' ஒன்றை வெளியிட்டார். அதில், அழகான நாய் ஒன்று நடப்பது, குறைப்பது, உருள்வது என, பல சேட்டைகளை செய்கிறது.இறுதியில் அந்த நாய் பேசத் துவங்குகிறது. அதன்பிறகுதான், டோகோ என்ற அந்த இளைஞர் நாய் வேடத்தில் இருந்தார் என்பது தெரியவருகிறது.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:நீண்ட காலமாக ஏதாவது ஒரு விலங்காக மாற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இதையடுத்து, சினிமா, நாடகங்களுக்கு உடைகள் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டேன். அவர்கள், அழகான ஒரு நாய் போல் எனக்கு வேஷமிட்டனர். இதை தயாரிப்பதற்கு, 40 நாட்களானது.மொத்தம், 12 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. எனக்கு பிடித்த 'கூலி' வகை நாய் போல வேடமிட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.நாய்போல் வேடமிட்ட படங்கள், வீடியோக்களை டோகோ சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ஆனால் தன் உண்மையான படத்தை அவர் வெளியிடவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE