தேவகவுடாவை சந்திக்கும் சந்திரசேகர ராவ்
பெங்களூரு: அடுத்த லோக்சபா தேர்தலில் மூன்றாம் அணியை உருவாக்குவது தொடர்பாக, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், நாடு முழுதும் பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். அந்த வகையில், ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவை, பெங்களூரு பத்மநாபநகர் வீட்டில் இன்று பிற்பகல் 12:30 மணிக்கு சந்தித்து ஆதரவு கோருகிறார்.
அவருக்கு தேவகவுடா மதிய விருந்து வழங்குகிறார்.எடியூரப்பா பா.ஜ.,வின் பெரிய பலம்பல்லாரி: ''முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.,வின் பெரிய பலம். அவரை ஓரங்கட்டும் பேச்சுக்கே இடமில்லை. அவரது பலத்தை செயலிழக்கும் வகையில், என்றுமே கட்சி செயல்படாது. எத்தகைய சூழ்நிலையிலும் அவரை கட்சி கை விடாது. அவரது போராட்டத்தை மக்களும், கட்சியும் என்றும் மறக்காது. நான்கு முறை முதல்வர் பதவி வகித்த பெரிய தலைவர்,'' என பல்லாரியில், போக்குவரத்து துறை அமைச்சர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.
சி.இ.டி., தேர்வில் ஹிஜாபுக்கு தடை
பெங்களூரு: கர்நாடகாவில், பி.இ., பொறியியில், பி.எஸ்.சி., டிப்ளமோ உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, ஜூன் 16, 17, 18ல், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடக்கிறது. மதத்தை அடையாளப் படுத்தும் வகையிலான ஆடைகள் அணிந்து கொண்டு தேர்வு எழுத வர கூடாது என்றும், அனைவரும் கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்றும் கர்நாடக தேர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் ஹிஜாப் எனும் முகம், உடல் மறைக்கும் ஆடைகள் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது உறுதியாகிறது.எடியூரப்பாவுக்கு 'சம்மன்'பெங்களூரு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வராக இருந்த போது, பெங்களூரின் பெல்லந்துார், தேவரபீசனஹள்ளியில் 4.8 ஏக்கர் நிலம், மறு அறிவிப்பு செய்தது தொடர்பாக, வாசுதேவரெட்டி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு, பெங்., மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி நேரில் ஆஜராக கூறியிருந்தார். அவருக்கு உடல் நிலை சரியில்லாததால், நேரில் ஆஜராக விலக்கு கேட்டு வழக்கறிஞர் மூலம் விண்ணப்பித்தார். அதை ஏற்றுகொண்ட நீதிமன்றம், விலக்கு அளித்து, ஜூன் 17ல் ஆஜராகும்படி 'சம்மன்' அனுப்ப உத்தரவிட்டார்.
தாவோஸ் மாநாடு வெற்றி: முதல்வர்
பெங்களூரு: ஸ்விட்சர்லாந்து நாட்டின் தாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார உச்சி மாநாட்டில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக குழு பங்கேற்றது. பெங்களூரு புறப்படுவதற்கு முன் நேற்று, பல்வேறு நிறுவன முக்கியஸ்தர்களுடன் சிற்றுண்டி வழங்கி கலந்துரையாடினார். மொத்தம், 52 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடு செய்வதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, பயணம் வெற்றி பெற்றதாக முதல்வர் தெரிவித்தார்.
குறுந்தகவல் மூலம் சம்பள விபரம்
பெங்களூரு: கர்நாடக அரசு ஊழியர்களுக்கு, மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் விபரத்தை அவர்களது மொபைல் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பும் முறையை, முதல்வர் பசவராஜ் பொம்மை, வரும் 30ல் துவக்கி வைக்கிறார். இதற்காக ஊழியர் சங்கத்தினர் மாநில அரசுக்கு நன்றியை தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு திட்டங்களும் அன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது.
54 கல்வி அதிகாரிகள் துாக்கியடிப்பு
பெங்களூரு: மாநிலம் முழுதும் தொடக்க கல்வி துறையின் 54 அதிகாரிகள் நேற்று ஒரே நாளில் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டனர். சமீப காலமாக எழுந்துள்ள பாட புத்தக சர்ச்சைக்கு சில அதிகாரிகளும் காரணம் என்று தெரிய வந்துள்ளதாக வந்த உறுதி தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில அதிகாரிகள் விரைவில் இடம் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாம்.
விவசாயிகளிடம் வசூலித்த 'டிபாசிட்' தொகை
மைசூரு: சட்ட மேலவையின், கர்நாடக மேற்கு பட்டதாரி தொகுதிக்கு விவசாயி பிரசன்னா கவுடா சுயேச்சையாக நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். டிபாசிட் தொகை செலுத்த பல்வேறு விவசாயிகளிடம், 10, 20, 50, 100 என ரூபாய் என வசூலித்து 10 ஆயிரம் ரூபாயை செலுத்தினார்.
ஆசிட் பாதித்த பெண் கவலைக்கிடம்
பெங்களூரு: பெங்களூரு சுங்கதகட்டேயில் 28 வயது இளம்பெண் காதலை மறுத்ததால் கடந்த மாதம் 28ல் நாகேஷ், 30 என்பவர் ஆசிட் வீசினார். 50 சதவீத காயங்களுடன் பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல் நிலை மிகவும் கவலைகிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.