தமிழக நிகழ்வுகள்
ராமேஸ்வரத்தில் பலாத்காரம் செய்து பெண் கொலை :ஒடிசா இளைஞர்கள் 6 பேர் கைது
ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் மீனவ பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேர் உட்பட 6 ஒடிசா இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தை கண்டித்து ஆறு மணி நேரம் நடந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இறால் பண்ணை தீ வைக்கப்பட்டது.ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தை சேர்ந்த 49 வயது மீனவ பெண்ணுக்கு கணவர், 3 மகள்கள் உள்ளனர்.
அந்த பெண் வடகாடு கடற்கரையில் பவள பாறையை சுற்றி வளரும் பாசிகளை தனியாக சென்று சேகரித்து விற்பது வழக்கம். மே 24 காலை 8:00 மணிக்கு கடலில் பாசி சேகரிக்க சென்ற பெண் மாலை வரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு வடகாடு கடற்கரையில் தேடினர்.
இறால் பண்ணை மீனவர்கள் நடமாட்டம் இல்லாத கடலோரத்தில் உள்ள இறால் பண்ணை அருகே முள் மரங்களுக்கு இடையில் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அன்றிரவு உறவினர்கள் கண்டனர். இறால் பண்ணையில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள்தான் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்றுள்ளனர் என முடிவு செய்தனர். ராமேஸ்வரம் எஸ்.ஐ., சதீஷ் தலைமையில் மீனவர்கள் அன்று இரவு 10:00 மணிக்கு இறால் பண்ணைக்கு சென்றனர்.அங்கு ஒடிசாவைச் சேர்ந்த விகாஸ் 24, பிரகாஷ் 22, ராகேஷ் 25, பிரசாத் 18, ரஞ்சன் ராணா 34, பிண்டு 18, ஆகிய 6 பேர் தப்பி செல்ல தயாராக இருந்தனர். அவர்களை கண்டதும் ஆத்திரமடைந்த மீனவர்கள், உறவினர்கள் அவர்களை தாக்கி, பண்ணையில் இருந்த மின் மோட்டார்கள் குடிநீர் தொட்டிகளை தீயிட்டு எரித்தனர். இதில் காயமடைந்த 6 பேரையும் போலீசார் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.கொலை சம்பவத்தை கண்டித்தும், பெண் குடும்பத்திற்கு நிவாரணம், அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்கிடவும், அனுமதியின்றி செயல்படும் இறால் பண்ணைகளை மூடக்கோரியும் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் மீனவர்கள், உறவினர்கள் காலை 8:00 மணிக்கு மறியல் செய்தனர். இறந்த பெண்ணின் இரண்டு மகள்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றனர். அங்கிருந்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தடுத்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்றினார். போராட்டக்காரர்கள் சாலையில் டயரை எரித்தனர்.
ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்சா முத்துராமலிங்கம், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் மீனவர்களிடம் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். மீனவர் குடும்பத்திற்கு எம்.எல்.ஏ., ரூ.2 லட்சம் நிதி வழங்கினார். மறியல் மதியம் 1:45 மணிக்கு வாபஸ் ஆனது. 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உறவினர்களிடம் எஸ்.பி., கார்த்திக் ஆறுதல் கூறி இறால் பண்ணை உள்ள பகுதிகளை ஆய்வு செய்தார்.
குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள் நீரில் மூழ்கி பலி
திருச்சி: மணப்பாறை அருகே, குளத்தில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உட்பட மூன்று சிறார்கள், நீரில் மூழ்கி இறந்தனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை, அண்ணாவி நகரைச் சேர்ந்த முருகன் மகன்கள் முரளி, 16, மணிகண்டன், 13, மற்றும் செங்கேஸ்வரன் மகன் அஸ்வின்ராஜ், 14, குமார்,13, ஆகிய நான்கு சிறார்களும், நேற்று மதியம், கீழ பூசாரிபட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளிக்கச் சென்றனர்.
குளித்துக் கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்கு சென்ற அஸ்வின்ராஜ், முரளி, மணிகண்டன் ஆகியோர் அடுத்தடுத்து நீரில் மூழ்கினர். இதைப்பார்த்து குமார் சத்தம் போட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும், கிராம மக்களும் குளத்தில் இறங்கி, நீரில் மூழ்கிய சிறார்களை தேடினர்.
நீண்ட நேர தேடலுக்கு பின், மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்தனர்.
ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறார்களும் உயிரிழந்தது மணப்பாறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
*********************
இந்தியா நிகழ்வுகள்:
ரூ.12 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட2 நக்சல்கள் போலீசில் சரண்
நாக்பூர், :தலைக்கு 6 லட்சம் ரூபாய் வீதம் 12 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்த இரண்டு நக்சல்கள், மஹாராஷ்டிர போலீசாரிடம் நேற்று சரண் அடைந்தனர்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., கூட்டனி ஆட்சி நடக்கிறது.
இங்கு, பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் தொடர்புடைய ராம்சிங்,63, மற்றும் மாதுரி, 34, என்ற இரு நக்சல்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இருவரை பற்றி தகவல் தருவோருக்கு தலைக்கு 6 லட்ச ரூபாய் வீதம் 12 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மஹாராஷ்டிர போலீஸ் அறிவித்து இருந்தது.
இந்நிலையில், ராம்சிங், மாதுரி இருவரும் கச்சிரோலி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று சரண் அடைந்து ஆயுதங்களை ஒப்படைத்தனர். இருவரின் மறுவாழ்வுக்காக தலா 4.5 லட்சம் ரூபாய் மஹா., அரசு வழங்கும் என போலீசார் தெரிவித்தனர்.
3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்,:ஜம்மு - காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார்.ஜம்மு - காஷ்மீர் முழுதும் நேற்று பல இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தினர். பாரமுல்லா மாவட்டத்தின் நஜிபாதில் அமைத்திருந்த சாவடியில் சோதனை நடத்திய போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை தரப்பில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார்.கொல்லப்பட்ட மூவரும் பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஷ் - இ - முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். தேடுதல் வேட்டை மற்றும் சோதனை தீவிரப்படுத்தப்படும் என போலீஸ் உயர் அதிகாரிகள் கூறினர்.
************************
உலகம் நிகழ்வுகள்
போலீஸ் துப்பாக்கிச் சூடுபிரேசிலில் 28 பேர் பலி
ரியோ டி ஜெனிரோ, :குற்றவாளிகளை பிடிக்க போலீசார் நடத்திய அதிரடி சோதனையின் போது நடந்த, துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், பிற மாகாணங்களை சேர்ந்த கொள்ளையர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள் ஏராளமாக பதுங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க நேற்று முன் தினம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அப்போது போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 41 வயது பெண் உட்பட 28 பேர் கொல்லப்பட்டனர்.அதிரடி சோதனை தொடர்ந்து நடக்கிறது. காயம் அடைந்தோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE