ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் இருவரை தேர்வு செய்வதில், அக்கட்சியில் நீண்ட இழுபறி நீடிக்கிறது.வேட்பாளர் தேர்வில், தென் மாவட்டத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டு உள்ளதால், தென் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், சென்னையில் முகாமிட்டுள்ளனர்.வன்னியர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், ஏற்கனவே பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு, எம்.பி., பதவி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போது முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்கலாம் என, பழனிசாமியும் விரும்புகிறார்.அதற்குக் காரணம், தென் மாவட்டங்களில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களில், முக்குலத்தோர் அதிகமாக உள்ளனர் என்பது தான்.மேலும், முக்குலத்தோர் சமுதாயம் புறக்கணிக்கப்படுகிறது என்ற எதிர்மறை பிரசாரத்தை, சசிகலா, தினகரன் கையில் எடுப்பதையும் தடுக்கலாம் என, பழனிசாமி கருதுகிறார்.
இதனால், அச்சமுதாய வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடமே, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஒப்படைத்துள்ளார்.அதோடு சேர்த்து, முஸ்லிம் சமுதாயத்திற்கும் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என, பன்னீர்செல்வம் விரும்புகிறார்.ஜாதி ரீதியாக வேட்பாளர் தேர்வு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால், இழுபறி நீடிக்கிறது.- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE