சென்னை:பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் அவர், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாயிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.
பிரதமர் வருகையையொட்டி, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்குப் பின், முதன் முறையாக பிரதமர் நரேந்திர மோடி, அரசு விழாவில் பங்கேற்பதற்காக, இன்று ஹைதராபாதில் இருந்து, மாலை 5:10 மணிக்கு, சென்னை விமான நிலையம் வருகிறார்.அவரது நிகழ்ச்சி நிரல்படி, விமான நிலையத்தில் இருந்து, ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ்., அடையாறு சென்று, அங்கிருந்து விழா நடக்கும், நேரு உள் விளையாட்டரங்குக்கு காரில் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து, சூழ்நிலைக்கேற்ப சாலைப் பயணமா அல்லது வான்வழி பயணமா என்பது முடிவு செய்யப்படும்.
அர்ப்பணிப்பு
நேரு உள் விளையாட்டரங்கில், மாலை 5:45 மணிக்கு நடக்கும் விழாவில், 2,900 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐந்து திட்டங்களை, பிரதமர் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிறார். அத்துடன், 28 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குறிப்பாக, 14 ஆயிரத்து 870 கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ள, சென்னை - பெங்களூரு விரைவு சாலை; 5,850 கோடி ரூபாயில் உருவாக்கப்பட உள்ள, சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால சாலை திட்டமும் இதில் அடக்கம்.
மேலும், 760 கோடி ரூபாயில், சென்னை எழும்பூர்; 376 கோடி ரூபாயில் மதுரை; 365 கோடி ரூபாயில் காட்பாடி; 116 கோடி ரூபாயில் ராமேஸ்வரம்; 82 கோடி ரூபாயில் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை, நவீன மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
இரவு 7:00 மணிக்கு விழா முடிந்து, சாலை வழியே சென்னை விமான நிலையம் செல்கிறார். இரவு உணவு முடித்து, டில்லி புறப்பட்டு செல்கிறார்.
விழாவில், தமிழக கவர்னர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, விழாவில் பங்கேற்க உள்ளனர். விழா அழைப்பிதழில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பெயரும் இடம் பெற்றுள்ளது.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி, சென்னை விமான நிலையத்தில் இருந்து, விழா நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கம் வரை, தீவர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.போலீஸ் கமிஷனர் தலைமையில், ஐந்து கூடுதல் கமிஷனர்கள், எட்டு இணை கமிஷனர்கள், 29 துணை கமிஷனர்கள் மற்றும் போலீசார் என, 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விமான நிலையம் மற்றும் நேரு உள் விளையாட்டு அரங்கில், ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் நாளை வரை, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி சாதனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
?
பெரியமேடு பகுதியில், ஈ.வே.ரா., சாலை, தாசபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லுாரி வரை, இன்று மாலை, 3:00 மணியில் இருந்து 8:00 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, அண்ணாசாலை, சர்தார் வல்லபபாய் படேல், ஜி.எஸ்.டி., சாலையிலும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால், வாகன ஓட்டிகள், இந்த சாலையில் செல்வதை தவிர்த்து, மாற்று வழியில் செல்ல வேண்டும் என, போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
பா.ஜ.,வின் 'வணக்கம் மோடி!' சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக, தமிழக பா.ஜ., சார்பில் பதிவிடப்பட்டுள்ள, 'வணக்கம் மோடி' என்ற 'ஹேஷ்டேக்' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள திட்டங்கள் தொடர்பான விபரங்களை, பா.ஜ.,வினர் வெளியிட்டு உள்ளனர். மேலும், 'நமோ கீதம்' என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'சாத்தியம் இல்லாததை நீ சாத்தியம் ஆக்கினாய்; மாற்ற முடியாததை நீ மாற்றி காட்டினாய்; அணி திரள்வோம்; குற்றமற்ற தலைவன் பின்னே படை திரள்வோம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE