கோவை: 'பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழித்து, 'மீண்டும் மஞ்சள் பை' திட்டம் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, சட்டசபை மதிப்பீட்டு குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக சட்டசபை மதிப்பீட்டு குழு, அதன் தலைவரான, எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், கோவையில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொண்டது. வேளாண் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தொடர்பாக, கொடிசியா வளாகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க, சுற்றுச்சூழல் துறை சார்பில், துண்டு பிரசுரம் வினியோகிப்பதாக, அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திரு.வி.க.நகர் எம்.எல்.ஏ., சிவக்குமார் பேசும்போது, ''மஞ்சள் பை திட்டத்தின் மூலம், பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதே, முதல்வரின் விருப்பம். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பொதுமக்களுக்கு இலவசமாக மஞ்சள் பை கொடுப்பதற்கான பணிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், துணிப்பை பயன்படுத்துவதை வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
கும்பகோணம் எம்.எல்.ஏ., அன்பழகன் பேசுகையில், ''கிராமங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை, விவசாயிகள் நகரங்களுக்கு கொண்டுவந்து விற்பனை செய்து வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே, உழவர் சந்தையின் நோக்கம். அதற்காக, பஸ்களில் கடைசி இரு வரிசை இருக்கைகளை அகற்றி, விளைபொருட்களை விவசாயிகள் எடுத்து வரலாம் என அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டிருந்தார். அதேபோல், தற்போதும் பஸ்களில் வேளாண் பொருட்கள் கொண்டு வர, போக்குவரத்து துறையினர் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

சட்டசபை மதிப்பீட்டு குழுவினர், நேற்று அவிநாசி ரோட்டில் உப்பிலி பாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்படும் மேம்பாலத்தை ஆய்வு செய்தனர். அவர்களுக்கு, திட்ட செயலாக்கம் தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விளக்கினர்.அப்போது, பொதுமக்கள் சிரமமின்றி ரோட்டை கடப்பதற்காக, கிருஷ்ணம்மாள் கல்லுாரி, கே.எம்.சி.எச்., - ஜி.ஆர்.ஜி., பள்ளி, பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லட்சுமி மில்ஸ் பகுதியில், சுரங்க நடைபாதை அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசின் கவனத்துக்கு செல்லும்
கொடிசியா அரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்திய பின், நிருபர்களிடம் மதிப்பீட்டுக்குழு தலைவர் ராஜா கூறியதாவது:
இரண்டு நாட்களாக நடந்த ஆய்வு கூட்டங்களில், வரப்பெற்ற பஸ் வசதி, நொய்யல் ஆறு மாசுபாடு, குடிநீர் பிரச்னை, கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள், அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
ஜி.என். மில்ஸ் மேம்பால பணிகள், நான்கு மாதங்களில் நிறைவடையும். கோவை- - நாகப்பட்டினம் இடையே, தனி 'காரிடர்' அமைக்கும் கோரிக்கை, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இங்கிலீஷ் பேசலாமா?
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் பேசுகையில், ''ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வெளியே விவசாயிகள் அல்லாதோர் கடை அமைத்துள்ளனர். அவர்களை அகற்ற வேண்டும். சந்தையில் காய்கறி விற்பவர்கள் ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் விவசாயிகளா,'' என்றார்.
அதற்கு, மதிப்பீட்டு குழு தலைவர் ராஜா, ''விவசாயிகள் தாராளமாக இங்கிலீஷ் பேசலாம். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளை, உடனடியாக அகற்ற வேண்டும். உழவர்கள் மட்டும் விற்பனை செய்ய, உரிய தணிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என வேளாண் துறைக்கு உத்தரவிட்டார்.
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன் பேசுகையில், ''ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் வெளியே விவசாயிகள் அல்லாதோர் கடை அமைத்துள்ளனர். அவர்களை அகற்ற வேண்டும். சந்தையில் காய்கறி விற்பவர்கள் ஆங்கிலம் பேசுபவர்களாக இருக்கின்றனர். அவர்கள் விவசாயிகளா,'' என்றார்.அதற்கு, மதிப்பீட்டு குழு தலைவர் ராஜா, ''விவசாயிகள் தாராளமாக இங்கிலீஷ் பேசலாம். ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு வெளியே உள்ள கடைகளை, உடனடியாக அகற்ற வேண்டும். உழவர்கள் மட்டும் விற்பனை செய்ய, உரிய தணிக்கை மேற்கொள்ள வேண்டும்,'' என வேளாண் துறைக்கு உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE