விண்வெளி முதல், உயர் தொழில்நுட்ப தொழிற் சாலைகள் வரை பல இடங்களில் ஆற்றல் மிகு லேசர் கதிர்கள் பயன்படுகின்றன. மேலும், இன்றுள்ளதைவிட ஆற்றல் மிக்க லேசர் கதிர்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
ஆற்றல் மிக்க லேசர்களை குவியப்படுத்தும் கண்ணாடிகளும், பலம் வாய்ந்தவையாக இருக்க வேண்டும். எனவே தான், ஹார்வர்டு பல்கலைக்கழக பொறியாளர்கள், மிகக் கடினமான பொருளான வைரத்தை வைத்து கண்ணாடிகளை உருவாக்கியுள்ளனர்.
பழைய லேசர் கருவிகளில் உள்ள கண்ணாடிகளில், சற்றே விரிசல் இருந்தாலும், லேசர் கதிர் பிரதிபலித்துச் செல்லாமல், கண்ணாடியின் ஊடாக மறுபுறம் பாயும் ஆபத்து இருக்கிறது. ஆனால், வைரக் கண்ணாடியில் அந்த சிக்கல் இல்லை என ஹார்வர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க கப்பற்படையில் 10 கிலோவாட் லேசர் பயன்படுத்தப்படுகிறது. இது இரும்பை வெட்டக்கூடிய திறன் கொண்டது. இதுபோன்ற லேசரை, 3க்கு 3 மி.மீ., பரப்புள்ள வைரக் கண்ணாடி சில்லு மீது, விஞ்ஞானிகள் செலுத்தினர். இக்கதிரை, 98.9 சதவீத அளவுக்கு வைரக் கண்ணாடி பிரதிபலித்தது. இதை வழக்கமான கண்ணாடிகள் சரியாக பிரதிபலித்திருக்க முடியாது. தற்போது, இத்தொழில்நுட்பத்தை வர்த்தகமயமாக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE