சென்னை: தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள கோடை வெயில், சென்னையில் மட்டும், 'ஹாட்ரிக் சதம்' அடித்து, மூன்றாம் நாளாக நேற்றும் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் மாநிலம் முழுதும், மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது. ஒரு வாரமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடக்கு மற்றும் வடகிழக்கு மாவட்டங்களிலும், மத்திய மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் மட்டும், அவ்வப்போது மிதமான வெயிலும், மழையுமாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது.இந்நிலையில், தமிழக தலைநகரான சென்னையில் நேற்று மூன்றாம் நாளாக தொடர்ந்து, 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டு, வெயில் சதம் அடித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் நேற்று, 100 டிகிரி பாரன்ஹீட்டான, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
கடந்த, 23, 24ம் தேதிகளிலும் சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில், 38 டிகிரி செல்ஷியசை தாண்டி வெப்பநிலை பதிவானது. நேற்று மூன்றாம் நாளாக சென்னையில் அனல் அடித்தது.நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில், 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.
திருச்சி, வேலுார், 39; கடலுார், தஞ்சாவூர், 38 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில், 18 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது.வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், இன்று வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE